உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

தடிகைபாடியும் இராசராச சோழனுக்கு உரியதாயிற்று. இராஷ்டிரகூடர்கள் வலிகுன்றிக் கிடந்தமையாலும் கங்கரையும் நுளம்பரையும் ஆதரித்து உதவி புரிவார் எவரும் இல்லாமையாலும் நம் இராசராசன் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி என்னும் நாடுகளை எளிதில் கைப்பற்றிக் கொண்டான். மைசூர் இராச்சியத்தில் கி. பி. 991-ஆம் ஆண்டில் வரையப் பெற்ற சோழ நாராயணன் கல்வெட்டொன்று உளது. அதில் குறிப்பிடப் பட்ட சோழ நாராயணன் என்பான் இராசராச சோழனேயாவான் என்பது வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து'. அஃதுண்மை யாயின் அப்போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இராசராசன் ஆட்சியின் ஆறாம் ஆண்டாகிய கி.பி. 991-க்கு முன்னர் நடைபெற்றன வாதல் வேண்டும்.

சோழர் படைகட்குத் தலைமை வகித்து அப்போர்களை நடத்தியவன் இராசராச சோழன் புதல்வனாகிய முதல் இராசேந்திர சோழனே யாவான். மும்முடி சோழன் பெற்ற களிறு மலையம், கொண்கானம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றி யமையோடு சேரனையும் நாட்டை விட்டோடும்படி செய்தது என்று மைசூர் இராச்சியத்திலுள்ள இராசராச சோழனது எட்டாம் ஆண்டுக் கல்வெட்டொன்று' கூறுவதும் அச்செய்தியை வலியுறுத்துதல் காண்க. அவ் வரசகுமாரன் இளமையில் கங்க மண்டலத்திற்கும் வேங்கி மண்டலத்திற்கும் மாதண்ட நாயகனாக இருந்தான்; அன்றியும் தன் தந்தையால் அளிக்கப்பெற்ற பஞ்சவன் மாராயன் என்ற பட்டமும் பெற்றிருந்தான்'.

இராசராச சோழனால் வென்று கைக்கொள்ளப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பது இவனது 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியினால் அறியப்படுகிறது. ஈழ மண்டலத்தில் அப்போது ஆட்சிபுரிந்து கொண்டிருந்தவன் கி.பி.981-ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனேயாம்4. அவன் இராசராச சோழனுக்குப் பகைஞரா 1. The Cholas, Vol. I, p. 207.

2. Ep. Carnatica, Vol. III, Sr. 140.

3. Ibid, Vol. III, Sr. 125.

4. Ep. Zeylanica, Vol. III, No. 1.