உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 நடுவணுள்ள பொலன்னருவா என்னும் ஊரைத் தன் தலை நகராக அமைத்துக் கொண்டான் என்பது ஈண்டு அறியத் தக்கது. பிற்காலத்திலிருந்த சிங்கள வேந்தனாகிய முதல் விசய வாகு என்பவன் அநுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றன னாயினும் அவன் தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட நகரம் பொலன்னருவா என்பதேயாம்.

இனி ஈழ மண்டலம் இராசராச சோழன் ஆட்சிக்குட் பட்டிருந்தது என்பதற்கு அந்நாட்டிலேயே பல சான்றுகள் உள்ளன. கொளும்பு மாநகரில் பொருட்காட்சிச் சாலையில் வைக்கப் பெற்றுள்ள கருங்கற் பாறையொன்றில் சோழ மண்டலத்து க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு வெளாநாட்டுச் சிறுகூற்ற நல்லூர் க்கிழவன் தாழிகுமரன் ஈழமான மும்முடி சோழ மண்டலத்து மாதோட்டமான இராசராசபுரத்து எடுப்பித்த ராசராச ஈஸ்வரத்து மகாதேவர்க்குச் சந்திராதித்தவல் நிற்க' என்று தொடங்கும் ஒரு கல்வெட்டுக் காணப்படுகின்றது. அக்கல் வெட்டால் சோணாட்டுத் தலைவன் ஒருவன் ஈழமண்டலத்தில் மாதோட்ட நகரத்தில் தன் நாட்டு வேந்தன் பெயரால் இராச ராசேச்சுரம் என்னும் சிவாலயம் ஒன்று எடுப்பித்து, அதற்கு அர்த்தயாம வழிபாட்டிற்கும் வைகாசித் திருவிழாவிற்கும் நிவந்தமாக இறையிலி நிலம் அளித்த செய்தி புலனாகின்றது. அன்றியும் ஈழமண்டலம் இராசராசன் சிறப்புப் பெயரால் மும்முடி சோழமண்டலம் என்று அந்நாளில் வழங்கப்பெற்று வந்தது என்பதும் மாதோட்ட நகரம் இராசராசபுரம் என்னும் மற்றொரு பெயரும் பெற்றிருந்தது என்பதும் அக்கல்வெட்டால் வெளியாதல் காண்க. சோழர்க்குத் தலைநகராயிருந்த பொலன்னருவா என்னும் ஊரில் சிவாலயம் ஒன்று கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் சிற்பவமைதியை நோக்குங்கால் கி. பி. பத்து பதினொன்றாம் நூற்றாண்டுகளில் கட்டப்பெற்ற சோழர் காலத்துக் கோயில்களைப் போல் அஃதும் அமைந் துள்ளது என்பது தெளிவாம். ஆகவே, இராசராச சோழனே அக்கற்றளியை எடுப்பித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அக்கோயிலுக்கு வானவன் மாதேவீச்சுரம்

1. S.I. I., Vol. IV, No. 1412.

"