உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

105

இராசராச சோழன் வேங்கி நாட்டை வென்று சக்தி வர்மனுக்கு அளித்தனனாயினும் அதனைத் தன் ஆட்சிக் குட்படுத்திக்கொள்ளவில்லை என்பது ஈண்டு அறியற்பாலது. எனவே, இவன் தன் பாதுகாப்பிற்கும் ஆதரவிற்கும் உட்பட்ட தனி இராச்சியமாகவே வேங்கி நாட்டை மதித்து நடத்தி வந்தனன் என்பது தெள்ளிது. இவ்விரண்டு அரச குடும்பத் தினர்க்கும் மணவினையால் ஏற்பட்ட தொடர்பே இவர்களைப் பிணித்து இத்தகைய நிலையில் அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்படி செய்தது என்பது திண்ணம்.

இனி, இராசராச சோழன் வென்று கைப்பற்றிய நாடுகளுள் கலிங்கமும் ஒன்று என்பது இவன் மெய்க்கீர்த்தியால் நன்கறியக் கிடக்கின்றது. கலிங்க நாடு என்பது கோதாவரி யாற்றிற்கும் மகாநதிக்குமிடையில் கீழ்கடலைச் சார்ந்திருந்த ஒரு நிலப் பரப்பாகும். அஃது இந்நாளில் வட சர்க்கார் என்று வழங்கும் நிலப் பகுதியில் அடங்கியுள்ளது. அந்நாட்டில் மகேந்திர கிரியில் தமிழ் மொழியிலும் வட மொழியிலும் வரையப் பெற்று ஆண்டு குறிக்கப்படாத இரண்டு கல்வெட்டுக்கள் உள. அவை இராசேந்திர சோழன், விமலாதித்தன் என்னும் குலூத வேந்தன் ஒருவனைப் போரில் வென்று அம்மலையில் வெற்றித் தூண் ஒன்று நிறுவினான் என்று கூறுகின்றன'. ஆனால், அப்போர் நிகழ்ச்சி இராசேந்திர சோழன் மெய்க்கீர்த்தியில் காணப்படவில்லை. ஆகவே, அஃது அவன் பட்டம் பெறுவதற்கு முன், தந்தையின் ஆட்சிக் காலத்தில் அவன் இளவரசனா யிருந்தபோது நிகழ்ந்ததாதல் வேண்டும். அக்காரணம் பற்றியே அவனது கலிங்க வெற்றி இராசராச சோழனது மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெள்ளிது.

மகேந்திரகிரிக் கல்வெட்டில் சொல்லப்படும் விமலா தித்தன் யாவன் என்பதும், இராசேந்திரன் தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அவன் நாட்டின் மீது படையெடுத்துச் சென்றமைக்குக் காரணம் யாது என்பதும் இப்போது புலப்பட வில்லை. ஒருகால் அக்கலிங்க வேந்தன் கீழைச் சளுக்கிய

1. S. I. I., Vol. V, Nos. 1351 and 1352.

A.S.I., 1912, pp. 171 and 172.