உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

107

செய்திகள் சிறிதும் புலப்படவில்லை. எனினும், இவன் வென்று கைப்பற்றிய பழந்தீவுகள் கடல் நடுவில் இருந்தமையால் அவற்றின் மீது படையெடுத்துச் செல்வதற்கு கப்பற் படைகள் இன்றியமையாதன ஆகும். எனவே, பெருவேந்தனாகிய நம் இராசராசன், அலைகடல் நடுவுள் பல கலங்கள் செலுத்தியே முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரத்தையும் வென்று கைப்பற்றின னாதல் வேண்டும். இவன் ஆட்சியில் முன் நிகழ்ந்த ஈழ மண்டலப் படை யெடுப்பையும் இவன் கப்பற் படைகளின் துணை கொண்டே நிகழ்த்தியிருத்தல் வேண்டும். ஆகவே, இராசராச சோழனிடத்தில் சிறந்த கப்பல் படை அந்நாளில் இருந்தது என்பது தேற்றம்.

இனி, இராசராச சோழன் ஆட்சியின் பிற்பகுதியில் சோழ இராச்சியம் மிக உயர்நிலையில் இருந்தது எனலாம். பாண்டி மண்டலமும் சேர மண்டலமும் அடங்கிய இராசராசத் தென் னாடும்' தொண்டை மண்டலமாகிய சயங்கொண்ட சோழ மண்டலமும், கங்க மண்டலமும், கொங்கு மண்டலமும் நுளம்பபாடி நாடும், கலிங்க நாடும், ஈழமாகிய மும்முடிச்சோழ மண்டலமும், இவன் ஆட்சிக்குட்பட்டிருந்தன என்று உறுதி யாகக் கூறலாம். இம்மண்டலங்களுள் சிலவற்றிற்குப் பெயர் களாக இவனது சிறப்புப் பெயர்கள் வழங்கப்பெற்றமை அறியத்தக்கது.

இராசராச சோழன் பேராற்றலும் பெருவீரமும் படைத்த தன் புதல்வனாகிய இராசேந்திரனுக்குக் கி. பி. 1012-ஆம் ஆண்டில் இளவரசுப் பட்டம் கட்டி அரசாங்க அலுவல்களில் கலந்து கொண்டு பல துறைகளிலும் பயிற்சி பெற்று வருமாறு செய்தனன். அவ்வாண்டிற்கு முன்னர் நிகழ்ந்த கங்கப் போர், கலிங்கப் போர், குந்தளப் போர் முதலானவற்றிற்குச் சென்று அவற்றை வெற்றியுடன் நடத்திப் புகழெய்தியவன் இராசேந்திர சோழனேயாவன். ஆதலால், அவன் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்ற நாளில் முப்பது வயதிற்குக் குறையாதவனாக இருந்திருத்தல் வேண்டும். தஞ்சைப் பெரிய கோயிலிலும் 1. Travancore Archaeological Series, Vol. I. p.292.

2. Ep. Ind., Vol. VIII, p. 260.