உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

கற்றளியாக எடுப்பித்தனனா என்பது ஈண்டு ஆராய்தற்குரிய தொன்றாகும். அப்பர் அடிகளது திருவீழிமிழலைத் திருத் தாண்டகத்தில் காணப்படும் 'தஞ்சைத் தளிக்குளத்தார்' என்னுந் தொடரால் சைவ சமய குரவர்கள் காலங்களில் தஞ்சை மாநகரில் தளிக்குளம் என்னுங் கோயில் ஒன்று இருந்தது என்பது நன்கு வெளியாகின்றது. ஆகவே, அப்பெரியோர்கள் அத்திருப்பதி மீது பதிகங்கள் பாடியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. தேவாரப் பதிகங்களுள் பல அழிந்து போயின, என்பது பலரும் அறிந்ததேயாம். எனவே, தஞ்சைத் தளிக்குளத்திற்குரிய பதிகங் களும் அழிந்துபோயிருத்தல் வேண்டும். எனினும் அப்பர் அடிகள் தம் திருவீழிமிழலைப் பதிகத்தில் அத்திருப்பதியைக் குறிப்பிட்டிருத்தலால் அது வைப்புத் தலமாக இக்காலத்தில் கருதப்பட்டு வருதல் அறியற்பாலது. அத்தகைய தஞ்சைத் தளிக்குளத்தைத்தான் இராசராச சோழன் பெரிய கற்றளியாக எடுப்பித்து அதற்கு இராசராசேச்சுவரம் என்னும் பெயரும் வழங்கிச் சிறப்பித்தனன் என்பது ஈண்டு உணரற்பாலதாகும். எனவே, அத்திருக்கோயிலின் தொன்மையும் பெருமையும் அறிந்துதான் இராசராசன் அதற்கு மிகச் சிறந்த முறையில் திருப்பணி புரிந்து யாவரும் வியக்கும் நிலையில் அதனை அமைத்துள்ளனன் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, தஞ்சை மாநகரில் வெற்றிடமாகக் கிடந்த நிலப்பரப்பில் அஃது இராசராசனால் புதியதாக அமைக்கப்பெற்ற தொன்றன்று என்பது தெள்ளிது.

இராசராச சோழன் சிவபாதசேகரன் என்னுஞ் சிறப்புப் பெயர் உடையவன் என்பது முன் கூறப்பட்டுள்ளது. இவன் சிவபெருமானிடத்தில் அளவற்ற பக்தியுடையவன் என்பது இவன் தஞ்சையில் எடுப்பித்த பெருங்கோயிலாலும் அதற்கு வழங்கியுள்ள நிவந்தங்களாலும் நன்கு விளங்கும். இவன் அத்துணைச் சிவபத்தியுடையவனாய்த் திகழ்ந்தமைக்குக் காரணம், சிவபெருமானிடத்தில் பேரன்பு பூண்டு பல தொண்டுகள் ஆற்றிய செம்பியன் மாதேவியும் குந்தவைப் பிராட்டியும் இவனை இளமையில் வளர்த்து நல்வழிப்படுத்தியமையேயாம். தாம் அப்பர் சுவாமிகள் திருவீழிமிழலைத் திருத்தாண்டகம் பா.8.