உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

113

மேற்கொண்ட சமயமொழிய மற்றைச் சமயங்களைக் கடைப் பிடித்தொழுகும் தம் தம் நாட்டு மக்களை வெறுத்துப் பல்லாற்றானுந் துன்புறுத்தும் அரசர் சிலர் போல, இவன் புறச் சமயத்தாரிடம் சிறிதும் வெறுப்புக் காட்டியவன் அல்லன். இவன் எல்லாச் சமயங்களையும் சோபான முறையில் வைத்துக் காணுங் கருத்துடையவனாய் அவற்றிற்குச் சிறிதும் இடையூறு நேராமல் காப்பாற்றி வந்தனன் என்பது இவன் காலத்து நிகழ்ச்சி களால் புலப்படுகின்றது. நாகப்பட்டினத்தின் கண் கடாரத் தரசனாகிய சூளாமணிவர்மனால் கட்டத் தொடங்கப்பெற்று அவன் மகன் மாற விஜயோத்துங்கவர்மனால் முடிக்கப்பெற்ற புத்த விகாரத்திற்கு' இராஜராஜப் பெரும்பள்ளி என்று தன் பெயரிடு வதற்கு இவன் உடன்பட்டமையும் அதற்கு நிவந்த மாக ஆனை மங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச்சந்தமாக அளித்தமையும் புறச் சமயங்களை இவன் ஆதரித்து வந்த செய்தியை நன்கு விளக்குவனவாகும். இவன் எடுப்பித்த தஞ்சை இராசராசேச்சுரத்துச் சுவர்களில் புத்தப் படிமங்கள் இருத்தலை இன்னுங் காணலாம். திருமாலுக்குப் பங்களூர் ஜில்லாவிலுள்ள மணலூரில் சயங்கொண்ட சோழ விண்ணகரம் என்னு ங் கோயிலும் தலைக்காட்டிற்கு அண்மையில் ஓர் ஊரில் இரவிகுல மாணிக்க விண்ணகரம் என்னுங் கோயிலும் இவ் வேந்தனால் எடுப்பிக்கப்பெற்று அவற்றிற்கு இவனாலும் இவன் தமக்கை குந்தவைப் பிராட்டியாலும் நிவந்தங்கள் விடப் பட்டிருக்கின்றன. சயங்கொண்டசோழன், இரவிகுல மாணிக்கம் என்பன இராசராசனுக்கு அக்காலத்தில் வழங்கிய சிறப்புப் பெயர்கள் என்பது முன் கூறப்பட்ட செய்தியேயாம். அவற்றை யெல்லாம் ஆராய்ந்து உண்மை காணுமிடத்து, இவன் தன் காலத்திலிருந்த எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடை

1.

2.

3

4

Ep. Ind, Vol. XXII, No. 34. இப்புத்தவிகாரம், இதனைக் கட்டிய அரசன் பெயரால் சூடாமணிவர்ம விகாரம் என்றும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு இராசராச சோழன் விட்ட நிவந்தத்தை உணர்த்தும் செப்பேடுகள் ஹாலண்டு தேயத்தில் லெய்டன் நகரப் பொருட்காட்சி நிலையத்தில் உள்ளன.

சமண பௌத்த கோயில்களுக்கு விடப்பட்ட இறையிலி நிலங்கள் பள்ளிச்சந்தம் எனப்படும். ஆனைமங்கலம் என்னும் ஊர் 8943 கலம் நெல் வருவாயுள்ள 97 வேலி நிலத்தைத் தன்னகத்துக் கொண்டது.

3. Ep. Car., Vol. IX, Chennapatna Nos. 130 and 132.

4. Ibid, Vol. III, T. Narasapur 35.