உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

123

இவன் புதிய நிவந்தங்களும் அரசாங்கத்தில் வழங்கும்படி ஏற்பாடு செய்திருப்பது குறிப்பிடத் தக்கதொன்றாம். திருவிசைப் பாவில் ‘மின்னாருருவம்' என்று தொடங்கும் கோயிற் பதிகம் பாடியுள்ள கண்டராதித்தன் இவனே என்று சிலர் கூறுவது பொருத்தமில் கூற்றாம்'. அப்பதிகம் பாடியவர், முதற் பராந்தக சோழனுடைய இரண்டாம் புதல்வராகிய கண்டராதித்தரே என்பது முன் விளக்கப்பட்டுள்ளது. எனவே, திருவிசைப்பாவி லுள்ள கோயிற் பதிகம் பாடிய முதற் கண்டராதித்தருடைய பேரனே கோயில்களின் காண்காணிப்பாகிய ஸ்ரீ காரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இவ்வரச குமாரன் என்பது ஈண்டு உணரத்தக்கது. இவனை இரண்டாங் கண்டராதித்தன் என்றும் கூறலாம்.

5. ஈராயிரவன் பல்லவரையன் ஆகிய மும்முடி சோழ போசன்:

இவன் பாம்புணிக் கூற்றத்து அரசூரின் கண் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு தலைவன்; இராசராச சோழன் பெருந்தரத்து அதிகாரிகளுள் ஒருவன்; தஞ்சைப் பெரிய கோயிலில் சண்டேசுவர தேவரை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தங்கள் அளித்தவன்; வட ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள திருவல்லம், மேற்பாடி என்னும் ஊர்களிலுள்ள கோயில்களுக்கும் நிவந்தங்கள் வழங்கியுள்ளனன் என்பது அக்கோயில்களில் காணப்படுங் கல்வெட்டுக்களால் புலப்படுகிறது'. இவன் இராசராச சோழனுக்குத் திருமந்திர ஓலை நாயகமாகவும் சில ஆண்டுகள் வரையில் இருந்துள்ளனன். ஆனைமங்கலச் செப்பேடுகளில் கையெழுத்திட்டுள்ள அரசியல் அதிகாரிகளுள் இவனும் ஒருவனாதலின், இவன் இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகிய இருவர் ஆட்சியிலும் உயர்நிலையில் இருந்தவன் ஆதல் வேண்டும்". இவன் பல்லவர் குடித்தோன்றல், மும்முடி சோழ போசன் என்னும் அரசாங்கப் பட்டம் பெற்ற பெருமையுடையவன்.

1. சோழ வமிச சரித்திரச் சுருக்கம், பக். 12.

2.S. I. I., Vol. II, No. 55.

3. Ibid, Vol. III, Nos. 19 and 54.

4. Ep, Ind., Vol. XXII, No. 34.