உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




134

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இனி, ஐந்தாம் மகிந்தனது ஆட்சியின் 36-ம் ஆண்டில் இராசேந்திர சோழனுடைய படைஞர்கள் ஈழ நாட்டில் பல டங்களில் கொள்ளையிட்டு, மணியும், பொன்னும், அணிகலன் களும், பல பொற்படிமங்களும் கவர்ந்து கொண்டனர் என்றும் போரில் புறங்காட்டி ஓடியொளிந்த அச்சிங்கள வேந்தை உடன்படிக்கை செய்துகொள்வதற்கு அழைப்பது போல் வருவித்துச் சிறைபிடித்து அப்பொருள்களோடு சோழ நாட்டிற்கு அனுப்பிவிட்டனர் என்றும் மகாவம்சம் கூறுகின்றது. அன்றியும், சிங்கள வேந்தனாகிய ஐந்தாம் மகிந்தன் என்பான், சோழநாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வரையில் வாழ்ந் திருந்து கி.பி. 1029-ஆம் ஆண்டில் இறந்தனன் என்பது மகாவம்சத்தால் அறியக்கிடக்கின்றது. அச்செய்திகள் எல்லாம் இராசேந்திர சோழன் கல்வெட்டுக்களில் காணப்பட வில்லை. எனினும் தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரிராசபுரத்திலுள்ள கல்வெட்டொன்று' மகிந்தன் சோழ நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இராசேந்திர சோழனுக்கு முற்றிலும் பணிந்துவிட்டான் என்று கூறுகின்றது. ஆகவே, அப்படை யெழுச்சியின் பயனாக ஈழ நாடு முழுவதும் இவன் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது என்று கூறலாம். ஈழ நாட்டில் காணப்படும் இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் சிலவற்றாலும் அச்செய்தி உறுதியாகின்றது.2 அக்கல்வெட்டுக்கள் சிதைந்த நிலையில் இருத்தலால் அவற்றிலுள்ள வரலாற்றுச் செய்திகள் எல்லா வற்றையும் அறிய இயலவில்லை.

இனி, ஐந்தாம் மகிந்தன் மகனாகிய காசிபன் என்பவனை ஈழ நாட்டு மக்கள் மறைவாக வளர்த்து வந்தனர் என்பதும் அவன் தந்தை சோழ நாட்டில் இறந்தவுடன் அவர்கள் அவனைத் தம் அரசனாக ஏற்றுக்கொண்டு சோழ நாட்டுப் படைகளுடன் ஆறு திங்கள் வரையில் போர் புரிந்து தென்கிழக்கிலுள்ள ரோகண நாட்டைக் கைப்பற்றி விக்கிரமபாகு என்ற பெயருடன் கி. பி. 1029-ஆம் ஆண்டில் அவனுக்கு முடிசூட்டினார்கள்

1. Ins.642 of 1909; The Colas, Vol. I, p. 240. 2.S. I. I., Vol. IV, Nos. 1389, 1390 and 1414.