உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




144

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இனி, மகிபாலன் என்பான் கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் வங்காள மாகாணத்தை ஆட்சி புரிந்த பால் மரபினர் வழியில் தோன்றிய வேந்தன் ஆவன். அவனது ஆட்சி வடக்கே காசி வரையில் பரவியிருந்தது என்று தெரிகிறது. அந்நாளில் வங்காள நாடு பல உள்நாடுகளைத் தன்னகத்துக் கொண்டு நிலவிற்று. அந்நாடுகளிலிருந்த அரசர்கள் எல்லாம் மகிபாலனுக்குக் கீழ்ப்படிந்து கப்பஞ் செலுத்தி வந்தனர். எனவே, அக்ககாலத்தில் அம்மகிபாலன் பேரரசனாகத் திகழ்ந்தனன் என்பது தேற்றம். சோழ நாட்டுப் படைத்தலைவன், முதலில் அப்பக்கத்திலிருந்த குறுநில மன்னர்கள் எல்லோரையும் வென்று, இறுதியில் பேரரசனாகிய மகிபாலனையும் போரில் புறங்காட்டி யோடும்படி செய்து, தோல்வியுற்ற மன்னர்களின் தலைகளில் கங்கைநீர் நிரம்பிய குடங்களையும் வைத்துக் கொண்டு தன் நாட்டிற்குத் திரும்பினான்.

அப்படையெழுச்சி நிகழ்ந்தபோது, இராசேந்திர சோழ னுடைய படைத்தலைவன், கங்கைப் பேராற்றில் யானைகளை வரிசையாக நிறுத்திப் பாலங்கள் அமைத்து அவற்றின் மீது தன் படைகளைச் செலுத்தி அவ்வாற்றை எளிதாகக் கடந்து சென்றான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கதோர் அரிய செய்தியாகும்'.

வட நாட்டில் வெற்றித் திருவை மணந்து பெரும் பொருளும் கங்கை நீரும் கைக்கொண்டு திரும்பிவந்த தன் படைத்தலைவனை, நம் இராசேந்திரன் கோதாவரியாற்றங் கரையிற் கண்டு பெரு மகிழ்ச்சியுற்று, அவன் கொணர்ந்த வற்றை ஏற்றுக்கொண்டு அவனோடு தன் நாட்டிற்குத் திரும்பினான். அவ்வாறு இவன் திரும்பி வரும்போது இடையிலுள்ள திருப்பதி களில் இறைவனை வணங்கி நிவந்தங்கள் அளித்த செய்தி கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. கங்கைகொண்ட சோழ புரத்திற்குத் தென்கிழக்கே பத்து மைல் தூரத்தில் உள்ளதும் க்காலத்தில் திருலோக்கி என்று வழங்குவதும் ஆகிய திரை

1. Travancore Archaeological Series, Vol. III, No. 34 Verse 71.

2. S. I. I., Vol. III, No. 205, Verse 112.

3. Ibid, Verses 118, 119 and 122.