உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

145

சய்ப்

லோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலத்திலுள்ள கல்வெட் டொன்று', 'இராசேந்திர சோழ தேவர் கங்கை கொண்டு எழுந்தருளுகின்ற இடத்துத் திருவடி தொழுது' என்று கூறுவதனால் அவ்வுண்மையை உணரலாம். அன்றியும் கும்பகோணத்தில் நாகேச்சுரரது கோயிலில் இறைவன் திருமுன்னர் வைக்கப்பெற்றுள்ள கங்கை விநாயகர் படிமமும் அப்படையெழுச்சியில் வடநாட்டிலிருந்து கொண்டுவரப் பட்டு இராசேந்திரனால் அங்கு பிரதிட்டை பெற்றதேயாம். அப் படிமம் அமைக்கப்பெற்ற கல்லும் அதன் சிற்ப அமைதியும் அது வடநாட்டிலிருந்து கொண்டுவரப் பட்டது என்பதை நன்கு வலியுறுத்துகின்றன. அன்றியும் கங்கை விநாயகர் என்னும் அதன் பெயர்க் காரணமும் அது வடபுலத்தி லிருந்து கங்கைகொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயருடைய இராசேந்திர சோழனால் கொண்டுவரப்பட்டது என்ற உண்மையை நன்கு விளக்குதல் காண்க. வெற்றி பெற்ற வேந்தர்கள் தோல்வி எய்திய நாடுகளிலிருந்து தம் வெற்றிக்கு அடையாளமாகக் கடவுட் படிமங்கள் கொண்டு வருவது பழைய வழக்கம்.

இனி, தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள எண்ணாயிரம் என்ற ஊரில் காணப்படும் கல்வெட்டொன்றில் 'உடையார் ஸ்ரீ இராசேந்திர சோழதேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுத்தோத்சவ விபவத்தால் கங்காப்பரிக்கிரகம் பண்ணியருளின கங்கைகொண்ட சோழனென்னுந் திரு நாமத்தால் இத் திருமுற்றத்தில் வைத்தருளின உத்தமாக்ரகம் கங்கைகொண்ட சோழனின் உண்ணும் . வைஷ்ணவர்" என்னும் செய்தி வரையப் பெற்றுள்ளது. இவ்வேந்தன் கங்கையைக் கொண்டு வந்தமையும் அதுபற்றிப் புரிந்த வீரச் செயலும் அறச் செயலும் அதில் எழுதப் பட்டிருத்தல் அறியத்தக்கது. வடவேந்தரை வென்று கங்கை நீரைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டுவந்த அருஞ்செயல் பற்றி, நம் இராசேந்திரன் கங்கைகொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயர் எய்தினன் என்பதும் அக்கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது.

1. Annual Report on South Indian Epigraphy for the year ending 31st March 1932, Para 13.

2. கலைமகள், தொகுதி 11 பக்கம் 236.