உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




156

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

இறந்து போனான் என்பது மகாவம்சத்தாலும் கல்வெட்டினாலும் உறுதியெய்துகின்றது. ஆகவே, அந்நாட்களில் அவனுடைய முடி முதலானவை சோழர்களுக்குக் கிடைத்திருத்தல் கூடும். விக்கிரமபாகு இறந்த பிறகு கித்தி என்பான் எட்டு நாட்கள் ரோகணத்தில் அரசாண்டான். அவனுக்குப்பிறகு மகாலான கித்தி என்பான் முடிசூடி அந்நாட்டில் மூன்று ஆண்டுகள் வரையில் ஆட்சிபுரிந்தான். அவன் சோழர்களோடு புரிந்த போரில் தோல்வியெய்தி அவ்வவமானத்தைப் பொறாது தன் கையால் கழுத்தை அறுத்துக் கொண்டு (கி. பி. 1044-ல்) இறந்தான்'. சோழ நாட்டுப் படைகள் அவன் முடி முதலான வற்றையும் பிற அணிகலன்களையும் பொருள்களையும் கைப் பற்றித் தம் அரசற்கு அனுப்பி விட்டன. மகாவம்சத்தில் குறிப்பிட்ட மகாலான கித்தியின் செய்தி, சோழ மன்னரது கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. இராசேந்திர சோழன் ஆட்சியின் இறுதியில் இராசாதிராசன் இளவரசனாயிருந்த காலத்தில் நடைபெற்ற

ரண்டாம் ஈழ நாட்டுப் போர் இவ்வாறு முடிவெய்திற்று. மகாலான கித்தியின் மகன் விக்கமபண்டு என்பவன் இலங்கையில் இருப்பதற்கு அஞ்சித் துளுவ நாட்டில் இருந்து கொண்டிருந்தான். அவன், தன் தந்தை இறந்ததை அறிந்து ரோகணத்திற்குத் திரும்பிச் சென்று அந்நாட்டின் ஆட்சியை (கி. பி. 1044-ல்) ஏற்றுக்கொண்டான் என்று மகாவம்சம் கூறுகின்றது. பின்னர் அங்கு நிகழ்ந்த போர்ச்செய்திகள் இராதிராச சோழன் ஆட்சியில் நன்கு விளக்கப்படும்.

இனி, இராசேந்திர சோழன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் சோழர்கட்கும் மேலைச் சளுக்கியர்கட்கும் மீண்டும் போர் தொடங்கிற்று. கி. பி. 1042-ல் மேலைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் ஜயசிங்கன் இறக்கவே, அவன் மகன் முதல் சோமேசுவரன் முடிசூட்டப்பட்டான். சோழர்களின் கல்வெட்டுக்கள் எல்லாம் அவனை ஆகவமல்லன் என்றே குறிப் பிடுகின்றன. ஜயசிங்கன் ஆட்சிக் காலத்திலேயே இடைதுறை நாடு மேலைச்சளுக்கியர்களால் கைப்பற்றப்பட்டுப் போயிற்று என்பது முன் கூறப்பட்டது. அதன் பின்னர், துங்கபத்திரை

1. Ep. Zeylanica, Vol. III. No. I. A Chronological Table of Ceylon Kings.