உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

157

யாற்றிற்குத் தெற்கே பல்லாரி ஜில்லாவில் சோழர்கள் ஆட்சிக் குட்பட்டிருந்த நிலப்பரப்பில் சில பகுதிகளை அவர்கள் கவர்ந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியினால் மேலைச் சளுக்கியர்கட்கும் சோழர்கட்கும் பகைமை முதிர்ந்து கொண்டே வந்தது. அதனால் ஆகவமல்ல சோமேசுவரன் பட்டம் பெற்றவுடன் சோழர்கள் அவனுடன் போர்புரிந்து தம் ஆற்றலைக் காட்ட வேண்டியது இன்றியமையாததாயிற்று. ஆகவே, இளவரசனாகிய இராசாதி ராசன் பெரும் படையுடன் மேலைச்சளுக்கிய நாட்டிற்குச் சென்று தன்னாடை! என்ற ஊரில் சளுக்கியப் படையைப் போரிற் புறங்கண்டு, அப்படையின் தலைவர்களாகிய கண்டப் பையன், கங்காதரன் என்பவர் களையுங் கொன்றான். அப்போர் நிகழ்ச்சிகளிற் கலந்து கொண்ட சோமேசுவரன் புதல்வர்களாகிய விக்கிர மாதித்தனும்’ விசயாதித்தனும் தம் படைத்தலைவன் சங்கமையனோடு போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டனர். பிறகு, இராசாதிராசன் அங்குத் தனக்குக் கிடைத்த யானை குதிரைகளையும் பெரும் பொருளையும் கைப்பற்றிக்கொண்டு, கொள்ளிப்பாக்கையும் எரியூட்டித் திரும்பினான். மேலைச் சளுக்கியரோடு இராசாதிராசன் செய்த போர் அவனது ஆட்சியின் 26-ஆம் ஆண்டாகிய கி.பி. 1044 ல் அவன் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. ஆகவமல்ல சோமேசுரன் கி. பி. 1042-ஆம் ஆண்டில் முடிசூட்டப்பெற்றவன். ஆகவே, அவனது ஆட்சியும் மேலைச் சளுக்கிய நாட்டில் அவ் வாண்டில் தொடங்கியிருத்தல் வேண்டும். எனவே, இராசாதிராசன்

இவ்வூர் 'தந்நாட' எனவும் ‘தாந்யகடகம்' எனவும் அந்நாளில் வழங்கியுள்ளது. இப்போது குண்டூர் சில்லாவில் கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதி என்ற பெயருடன் உள்ளது இவ்வூரேயாகும். இவ்வூரில் நிகழ்ந்த போரில் வெற்றி பெற்ற இராசாதிராசன் மீது புலவ ரொருவர் பரணி பாடிப் பாராட்டியுள்ளார். இச் செய்தி அவனது மெய்க்கீர்த்தியிற் காணப்படுகிறது. இப்பரணி நூல் கிடைக்க வில்லை. இது கலிங்கத்துப் பரணிக்கும் காலத்தாற் முற்பட்டதாகும்.

2. சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களில் ‘விக்கி, என்று குறிப்பிடப்பட்டுள்ளவன் விக்கிரமாதித்தனே யாவன். மேலைச் சளுக்கிய மன்னருள் இவன் ஆறாம் விக்கிர மாதித்தன் எனப்படுவன்'

3. S. I. I., Vol. IV, Nos. 537 and 867.

Ibid, Vol. VIII, No. 675.

4. கொள்ளிப்பாக்கை என்பது ஆந்திர நாட்டுத்தலை நகராகிய ஹைதராபாத்திற்கு வடகிழக்கே 54 மைல் தூரத்தில் 'குல்பாக்' என்ற பெயருடன் உள்ளது.

3