உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 அந்நாட்டில் நிகழ்த்திய போரும் கி.பி. 1042, 1043-ஆம் ஆண்டுகளில் நடைபெற்றதாதல் வேண்டும். அவன் இளவரசனா யிருந்த காலத்தில் நடத்திய அம்மேலைச் சளுக்கியப் போர் வெற்றியுடன் முடிவெய்தியமை அறியத்தக்கது.

இனி, நம் இராசேந்திரன் இளமையில் தன் தந்தையால் இடப்பெற்ற மதுராந்தகன் என்னும் பெயரும் தன் முடிசூட்டு விழாவில் பெற்ற இராசேந்திரன் என்னும் அபிடேகப் பெயரும் உடையவனாயிருந்தமையோடு வேறு சில சிறப்புப் பெயர் களையும் எய்தியிருந்தனன் என்பது திருவாலங்காட்டுச் செப்பேடு களாலும்' கல்வெட்டுக்களாலும் நன்கறியக் கிடக்கின்றது. அவை உத்தம சோழன், சோழேந்திர சிம்மன், விக்கிரம சோழன், முடிகொண்ட சோழன், பண்டித சோழன், கடாரங் கொண்டான், கங்கைகொண்ட சோழன் என்பனவாம். அவற்றுள், உத்தம சோழன், சோழேந்திர சிம்மன், விக்கிரம சோழன் என்னும் பெயர்கள் இவனுக்கு வழங்கியமை திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியப்படுகிறது.2 சோழர்களது முடிசூட்டு விழா நடைபெற்ற தொன்னகரங்களுள் ஒன்றாயிருப்பதும் அரச குடும்பத்தினர் பலர் அக்காலத்தில் தங்கி வாழ்ந்து வந்ததும் ஆகிய பழையாறை மாநகர் இவ்வேந்தன் ஆட்சிக் காலத்தில் முடிகொண்ட சோழபுரம் என்று வழங்கப் பெற்றிருத் தலையும் அந்நகரின் தென்பால் ஓடும் ஆறு இவனால் வெட்டப் பெற்று முடிகொண்ட சோழப் பேராறு" என்னும் பெயர் எய்தியிருத்தலையும் நோக்குங் கால் இவனுக்கு முடிகொண்ட சோழன் என்னும் சிறப்புப் பெயர் இருந்தமை நன்கு புலனாகும். இவன் தமிழ்மொழியிலும் வட மொழியிலும் சிறந்த புலமையுடையவனாயிருந்தமை பற்றி இவனைப் பண்டித சோழன் என்று அக்காலத்திலிருந்த அறிஞர்கள் பாராட்டிக் கூறியுள்ளனர்". நம் தமிழகத்திற்குத் தென்கிழக்கேயிருந்த

1. S. I. I., III, No. 205.

2. Ibid, Verses 90, 104 and 113.

3. Ins. 271 of 1927.

4. முதற் குலோத்துங்க சோழன், ப. 21.

5. S. I. I., Vol. II, Nos. 12 and 70.