உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

161

தவிர எஞ்சிய பகுதிகள் எல்லாம் இடிந்தழிந்து போயின'. விமானம் தஞ்சைப் பெரிய கோயில் விமானத்தைப் போல் மிக அழகாக அமைந்துள்ளது. அது நூறடிச் சதுரமாக இருப்பதோடு நூற்றெழுபதடி உயரமும் ஒன்பது நிலைகளும் உடையது'. நேரே செல்லச் செல்லச் சிறுத்துச் செல்லும் இயல்பினதாய் உச்சியில் ஒரே கல்லாலாகிய சிகரத்தை உடையது. அவ்விமானத்தின் கீழ் மிகப்பெரிய சிவலிங்க வடிவத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது திருப்பெயர் கங்கைகொண்ட சோழேச்சுரர் என்பது. அப்பெருமானது நாள்வழிபாட்டிற்கும் பிறவற்றிற்கும் இராசேந்திர சோழனும் இவன் வழித்தோன்றல்களும் நிவந்தமாக வழங்கியுள்ள ஊர்கள் பல. அவற்றுள் ஒன்றேனும் அக்கோயிலுக்குரியதாக இக் காலத்தில் இல்லை.

நம் இராசேந்திரன், தன் தலைநகராகிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அண்மையில் பெரியதோர் ஏரியை வெட்டு வித்து மக்கட்குத் தண்ணீர்க்குறை இல்லாதவாறு செய்தான். அப்பேரேரி, சோழகங்கம் என்னும் பெயருடையது என்பது திருவாலங்காட்டுச் செப்பேடுகளால் அறியப்படுகிறது. அச் செப்பேடுகள் அதனை நீர்மயமான வெற்றித்தூண் என்றும் புகழ்ந்து கூறுகின்றன. இக் காலத்தில் அது பொன்னேரி என்று வழங்கப்படுகிறது. தெற்கு வடக்கில் பதினாறு மைல் நீளமுள்ள அவ்வேரி முற்காலத்தில் மிக உயர மான கரைகளையுடைய தாய்த் திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு ஜில்லாக்களுள் சில பகுதிகளைத் தன் நீர் வளத்தால் செழிப்பித்து நன்னிலையில் இருக்கும்படி செய்த பெருமையுடையதாகும். தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரம் தாலுகாவில் இப்போது மிகப் பெரிய ஏரியாகவுள்ள வீர நாராயணன் ஏரியும் சோழகங்கம் என்னும் இவ்வேரிக்கு வடிகாலாகவே இருந்ததாம். மாளவ தேசத்து

1. இப் பெருங்கோயிற் கற்களைக் கொண்டு திருப்பனந் தாளுக்கு வடக்கே மூன்று மைலிலுள்ள கொள்ளிடப் பேராற்றிற்கு ஆங்கிலேயர் ஓர் அணை கட்டியிருப்பது அறியத் தக்கது. அதிலுள்ள கருங்கற்களில் பழைய கல்வெட்டுக்கள் இருத்தலை இன்றுங் காணலாம். இவ்வாறு பலரும் இடித்து எடுத்துக் கொண்டு சென்ற கருங்கற்களிலுள்ள கல்வெட்டுகள் பல அரிய வரலாற்றுக் குறிப்புகளையுடையவாயிருத்தலுங் கூடும்.

2. Indian Antiquary, Vol. IX, pp. 117-120

3. S. I. I., Vol. III, No. 205, Verse 124.