உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

167

அளித்துள்ளமையாலும் பாண்டி நாடு இராசராச சோழன் கால முதல் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தமையாலும் இப்பாண்டி வேந்தன் இராசேந்திர சோழனுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்த ஒரு சிற்றரசன் ஆதல் வேண்டும்.

6. வல்லவரையன் வந்தியதேவன்: இவன் இராசராச சோழன் தமக்கையான குந்தவைப் பிராட்டியின் கணவன் ஆவன்; வடஆர்க்காடு சில்லாவில் பிரமதேசம் என்ற ஊரைச் சூழ்ந்த பகுதிகளை அரசாண்டவன்'. சேலம் சில்லாவின் ஒரு பகுதி வல்லவரையர் நாடு என்று அக்காலத்தில் வழங்கப் பெற்றது'. எனவே, தன் அத்தையின் கணவன்பால் இராசேந்திரன் மிக்க அன்பும் மதிப்பும் வைத்திருந்தான் என்பது இனிது புலனாதல் காண்க. இவ்வல்லவரையன் சோழர்க்குச் சிறந்த படைத் தலைவனாகவும் இருந்தமை அறியத்தக்கது.

7. உத்தமசோழமிலாடுடையான்: இவன் தென்னார்காடு சில்லாவில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்ட மலைய மானாட்டை ஆட்சி புரிந்த ஒரு குறுநில மன்னன் ஆவன். இவனது இயற்பெயர் பராந்தகன் யாதவ வீமன் என்பது. இவன் கங்கை கொண்ட சோழனுடைய மருமகனாகிய இராசராச நரேந்திரனுக்கு உதவி புரியும் பொருட்டு வேங்கி நாட்டிற்குச் சென்று கலிதிண்டி என்ற ஊரில் மேலைச் சளுக்கியரோடு நிகழ்த்திய போரில் உயிர் துறந்தான். இவனோடு உடன் சென்ற இராசராச பிரமமாராயன், உத்தமசோழ சோழகோன் என்ற படைத் தலைவர்களும் அப்போரில் இறந்தனர். இவர்கள் மூவருக்கும் அவ்வூரில் மூன்று சமாதிக் கோயில்கள் இராசராச நரேந்திரனால் அமைக்கப்பெற்று நிவந்தங்கள் அளிக்கப் பட்டமை அறியத்தக்கதாகும். இந்நிகழ்ச்சி கி.பி.1035-ல் நிகழ்ந்ததாதல் வேண்டும்.

5

1. Ins. 46 of 1907.

2. Ins. 191 and 243 of 1915.

3. Ins. 157 of 1915.

4. Ins. 20 of 1905; Ins. 587 of 1908.

5. Eastern Calukyas Dr. N. Venkataramanayya M. A., pp. 38 and 39.