உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172

12. முதல் இராசாதிராச சோழன்

கி. பி. 1018

-

1054

.

இம்மன்னர் பெருமான் முதல் இராசேந்திர சோழனுடைய மூத்த புதல்வன். அவ்வரசன் தேவிமார் ஐவருள் இவன் யார் வயிற்று மகன் என்பது புலப்படவில்லை. செங்கற்பட்டு சில்லா விலுள்ள திருவடந்தைத் திருமால் கோயிலில் காணப்படும் கல்வெட்டொன்று இவன் பூர நாளில் பிறந்தவன் என்று உணர்த்துகின்றது. வேள்வியிற் சிறந்து விளங்கும் முத்தீயைப் போன்ற மூன்று புதல்வர் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டால் பாராட்டப் பெற்ற மூவருள் இவனே முதல்வன் ஆவான்.2 மைசூர் இராச்சியத்தில் மிண்டிகல் என்னும் ஊரிலுள்ள ஒரு கல்வெட்டு, இராசாதிராசன் ஆட்சியின் முப்பதாம் ஆண்டாகிய சகம் 970-ல் அங்குள்ள கோயிலுக்கு நிலம் அளிக்கப் பெற்றதையும் அங்கே ஒரு குளம் அமைக்கப்பெற்றதையும் கூறுகின்றது. அதனால், இவ்வேந்தன் சகம் 940-க்குச் சமமான கி. பி. 1018ஆம் ஆண்டில் முடிசூட்டப்பட்டவன் என்பது நன்கு துணியப்படும். ஆகவே, இராசேந்திர சோழன் தன் முதற் புதல்வனும் பேராற்றல் படைத்த பெருவீரனுமாகிய முதல் இராசாதிராசனுக்குக் கி. பி. 1018-ல் இளவரசுப் பட்டங்கட்டி அரசியலில் ஒரு பகுதியை இவன்பால் ஒப்பித்திருந்தனன் என்பது தெள்ளிது.

3

தன் முன்னோர்கள் கைக்கொண்டொழுகிய முறைப் படியே இவனும் இளவரசுப் பட்டம் பெற்ற நாளில் இராசகேசரி என்னும் பட்டம் புனைந்து கொண்டான். இவனுக்கு முன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்த இவன் தந்தை இராசேந்திரன்,

1. Ins. 258 of 1910.

2. Travancore Archaeological Series, Vol. III, No. 34 Verse, 73. 3. Ep. Car., Vol, X, CT. 30; Ep. Ind., Vol. V, NO. 23