உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

173

பரகேசரி என்னும் பட்டமுடையவன் என்பது நாம் அறிந்ததே. ஆகவே, இவன் இராசகேசரியாதல் எவ்வாற்றாலும் பொருத்த முடைத்து.

கல்வெட்டுக்களில் இவனுக்கு மூன்று வகை மெய்க் கீர்த்திகள் காணப்படுகின்றன. ஒன்று 'திங்களேர் பெறவளர் என்று தொடங்குகிறது; மற்றொன்று, 'திங்களேர் தரு" என்று ஆரம்பிக்கிறது; பிறிதொன்று, ‘திருக்கொடியொடு தியாகக் கொடி* என்ற தொடர்களை முதலில் கொண்டது. அவற்றுள், ‘திங்களேர்பெற' என்று தொடங்குவது இவனது ஆட்சியின் இருபத்தாறாம் ஆண்டு வரையில் நிகழ்ந்தவற்றைக் கூறி அந்நிலையில் நின்றுவிடுகிறது. 'திங்களேர் தரு' என்று தொடங்குவது இவன் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல செய்திகளை விரித்துக் கூறும் நீண்ட மெய்க்கீர்த்தி யாகும். அஃது இவனது ஆட்சியின் முப்பதாம் ஆண்டு முதல் கல்வெட்டுக்களில் காணப்படுகிறது. சில கல்வெட்டுக்களில் மாத்திரம் காணப்பெறும் அம்மெய்க்கீர்த்தி, வேறு எங்கும் குறிக்கப்படாத சில அரிய செய்திகளைத் தன்னகத்துக் கொண்டுளது. திருக்கொடியோடு தியாகக்கொடி' என்று தொடங்குவது மேலே குறிப்பிட்டுள்ள மெய்க்கீர்த்தியில் காணப்படும் செய்திகளுள் சிலவற்றையே கூறுகின்றது. அம்மெய்க்கீர்த்தி களின் துணை கொண்டு இவ்வேந்தன் காலத்து நிகழ்ச்சிகளை ஆராய்ந்து காண்பது ஏற்புடையதேயாம்.

ராசேந்திர சோழன் கி.பி. 1044-ஆம் ஆண்டில் இறந்த பிறகு, முறைப்படி இவன் சோழ இராச்சியத்திற்குச் சக்கர வர்த்தியாகிச் செங்கோல் செலுத்தத் தொடங்கினான். இவன் பிறவியிலேயே ஆண்மையும் வீரமும் படைத்தவன்; தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் இருபத்தாறு ஆண்டுகள் வரையில் இளவரசனாயிருந்து அரசியல்துறையில் சிறந்த பயிற்சி பெற்றவன்; பாண்டியர், சேரர், சிங்களர், மேலை சளுக்கியர் என்பவர் களோடு பெரும் போர் புரிந்து வெற்றி மாலை சூடிப்

1. S. I. I., Vol. V No. 633.

2. Ibid, Vol. IV, No. 537.

3. Ins. 224 of 1925.