உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

177

நாட்டிலிருந்து கொண்டிருந்தவனும் சோழர்பால் தோல்வியுற்று அவ்வவமானம் பொறாது உயிர்துறந்த மகாலானகித்தியின் புதல்வனும் ஆகிய விக்கமபண்டு என்பவன் ஒருவன் கி. பி. 1044 முதல் 1047 வரையில் ரோகண நாட்டில் அரசாண்டானென்று மகாவம்சம் கூறுகின்றது. இராசாதிராச சோழனது மெய்க் கீர்த்தியுணர்த்தும் விக்கிரம பாண்டியனும் மகாவம்சம் கூறும் விக்கமபண்டும் ஒருவனே யாதல் வேண்டும். மெய்க்கீர்த்திச் செய்தியைக் கூர்ந்து நோக்குமிடத்து, அவன் பாண்டி மன்னன் ஒருவனுக்கு இலங்கை யரசன் மகள் வயிற்றிற் பிறந்த ஒரு பாண்டிய அரச குமாரனாக ருத்தல் வேண்டும் என்பதும் தனக்குரிய பாண்டி நாட்டை இராசாதிராச சோழன்பால் இழக்க நேர்ந்தமையால் ஈழ நாட்டிற்குச் சென்று தன் தாய்ப் பாட்டனுக்குரிய ரோகண நாட்டை ஆண்டு வந்தவனாதல் வேண்டும் என்பதும் உய்த்துணரப்படுகின்றன. மகாவம்சம் கூறுவதை நோக்குங்கால், அவன் ரோகணத்தை யாண்ட மகாலானகித்திக்குப் பாண்டி மன்னன் மகள் வயிற்றிற் பிறந்த ஓர் அரச குமாரனாக இருத்தல் கூடும் என்று கருதற்கும் இடமுளது. அஃது எவ்வாறாயினும் ஆகுக. கி. பி. 10, 11-ம் நூற்றாண்டுகளில் பாண்டியரும் சேரரும் இலங்கையரசர்களும் தமக்குள் மணவினையால் தொடர்புகொண்டு நெருங்கிய உறவினராகித் தமக்குப் பெரும் பகைஞராயிருந்த சோழரை வென்று தம்தம் நாட்டைக் கைப்பற்றிச் சுயேச்சையாய் ஆட்சி புரிய முயன்று வந்தனர் என்பது ஒருதலை. ஆகவே, அவ் விக்கிரம பாண்டியன் வரலாறு ஏற்றுக்கொள்ளத் தக்கதேயாம். இனி, அவ்விக்கிரம பாண்டியன் ஈழ நாட்டிலும் இராசாதி ராசன்பால் தோல்வியுற்று மணிமகுடம் முதலானவற்றை இழந்தனன் என்று கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. அவனை அயோத்தி யரசகுமாரனாகிய ஜகதீபாலன் என்பவன் கி. பி. 1047-ல் போரிற்கொன்று அவனது ரோகண நாட்டைக் கைப்பற்றி, கி. பி. 1051 வரையில் அங்கு அரசாண்டனன் என்றும் அவனையும் சோழர்கள் போரிற் கொன்று, அவன் மனைவியையும் மகளையும் பிற செல்வங்களையும் சோழ நாட்டிற்குக் கொண்டுவந்து விட்டனர் என்றும் மகாவம்சம் கூறுகின்றது. ஆனால் இராசாதிராச சோழன் கல்வெட்டுக்களில்