உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




212

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -3

இரு தரத்தினர்க்கும் விசயவாடை நகர்க்கண்மையில் பெரும்போர் நடைபெற்றது. அதில் சளுக்கிய தண்டநாயகர்கள் தோல்வி யுற்றுத் தம் உயிர் பிழைத்தோடிக் கானகத்தின்கண் ஒளிந்தனர். பிறகு இவன் கோதாவரியாற்றைத் தாண்டி, கலிங்கம் ஏழுங் கடந்து சர்க்கரக்கோட்டத்திற்கு அப்பாலும் படையுடன் சென்று வேங்கிநாட்டைத் திரும்பக் கைப்பற்றினான்; இறுதியில் தன்பால் அடைக்கலம் புகுந்த கீழைச்சளுக்கிய மன்னனாகிய ஏழாம் விசயாதித்தனிடம் அந்நாட்டை அளித்துவிட்டு, வெற்றி வேந்தனாய்த் தன் தலைநகர்க்குத் திரும்பினான்.

இவன் இரண்டாம் முறையிலும் வேங்கையில் நிகழ்த்திய போரில் வெற்றி எய்தியமையால் மேலைச்சளுக்கியர் எண்ணம் நிறைவேறாமற் போயிற்று. எனவே, இவன் வேங்கிநாடு பற்றித் தன் தமையன்மாரினும் மிகுந்த கவலை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இனி, வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியில் குறிக்கப் பெற்றுள்ள போர் நிகழ்ச்சிகளுள், இவன் ஈழநாட்டு மன்னன் விசயபாகுவுடன் புரிந்தபோரும் ஒன்றாகும்; அஃது இவனது ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்களுள் ஒன்றில் மாத்திரம் காணப்படு கிறது.' எனவே, அது கி. பி. 1067-ஆம் ஆண்டில் நடைபெற்றதாதல் வேண்டும். ஈழமண்டலத்தின் தென்கீழ்ப்பகுதியாகிய ரோகண நாட்டைத்தவிர மற்றப்பகுதிகள் எல்லாம் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என்பது முன்னர்க் கூறப்பட்டுளது. அந்த ரோகண நாட்டிலிருந்த விசயபாகு என்னும் வேந்தன் சோழர் ஆட்சியை ஒழித்து ஈழமண்டலம் முழுவதையும் தன் ஆளுகையின் கீழ் அமைப்பதற்குப் பெரிதும் முயன்றான். அதனையறிந்த வீரராசேந்திரன் பெரும்படை யொன்றைக் கப்பல் வழியாக ஈழநாட்டிற்கு அனுப்பினான். அப்படை அங்குச் சென்று விசயபாகுவோடு போர்புரிந்து அவனை ஓடியொளியுமாறு செய்ததோடு அவன் மனைவியைச் சிறைப்படுத்திக் கொண்டும் அளப்பரும் பொருளுடன் திரும்பிற்று. அப்போரின் பயனாக ஈழமண்டலம் முழுவதும் வீரராசேந்திரன் ஆட்சிக்கு உள்ளாயிற்று என்று இவன் கல்வெட்டு உணர்த்துகின்றது. விசயபாகுவின் 1. Ep. Ind., Vol, XXI, No. 38.