உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




228

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

கூறுகின்றன. அன்றியும், அவன் வைணவர்கட்கு இன்னல் ழைத்தமைப்பற்றிச் சோழர் மரபையே ஒழித்து அழித்து விடுவதாகத் திருவாரூர்த் தியாகராசப் பெருமான் உரைத் தருளினார் என்றும் அத் திவ்யசூரி சரிதம் உணர்த்துகின்றது.1 நம் அதிராசேந்திரன் முடிசூடிய சில திங்கள்களில் இறந்தமை யாலும் பண்டைச் சோழர் மரபு இவனோடு இறுதி எய்தியமை யாலும் இவனே தில்லைச் சித்திரக்கூடத்தைச் சிதைத்துத் திருமாலைக் கடலில் கிடத்திய கிருமிகண்ட சோழனாயிருத்தல் வேண்டும் என்றும் அக்கொடுஞ்செயல் பற்றிச் சோழ நாட்டில் நிகழ்ந்த கலகத்தில் இவன் கொல்லப்பட்டிருத்தல் வேண்டும் என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளருள் சிலர் கருதுகின்றனர். அவர்கள் கருத்தையும் ஆராய்ந்து ஆராய்ந்து உண்மை காண்பது இன்றியமையாத தாகும்.

2

நம் அதிராசேந்திரன் தன் முன்னோர்களைப்போல வைணவ சமயத்தில் சிறிதும் வெறுப்பின்றி அதன்பால் ஆதரவு காட்டிச் சமயப் பொறையுடன் ஒழுகியவன் என்பதற்கும் சித்திரக்கூடத் திருமாலைக் கடலில் கிடத்தியவன் விக்கிரம சோழன் மகனாகிய இரண்டாம் குலோத்துங்க சோழனே என்பதற்கும் பல சான்றுகள் கல்வெட்டுக்களிலும் தமிழ் நூல்களிலும் உள்ளன. அவையெல்லாம் இரண்டாங் குலோத்துங்க சோழன் ஆட்சியில் நன்கு விளக்கப்படும்.

3

தென்னார்க்காடு ஜில்லாவிலுள்ள திருவக்கரை சந்திர மௌளீசுவரர் சிவாலயத்திற்குள் இருந்த வரதராசப் பெருமாள் கோயில் அதிராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் கருங்கற் கோயிலாகக் கட்டப்பெற்றது என்பது அவ்வூரில் காணப்படும் கல்வெட்டொன்றால்" இனிது புலப்படுகின்றது. இச்செய்தி யொன்றை இவன் வைணவ சமயத்தை வெறுக்காமையோடு அதற்கு ஆதரவும் அளித்துச் சமயப்பொறையுடன் ஒழுகி வந்தான் என்பதற்குத் தக்கதோர் எடுத்துக்காட்டாகு மன்றோ?

1. திவ்ய சூரிசரிதம், பக்கங்கள் 218 – 19

2. The cholas, Vol. I, Page 354

3. இராசராசசோழன் உலா, வரிகள் 65- 66 தக்கயாகப் பரணி, பாடல் 777.

4. Ins. 205 of 1904