உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

229

எனவே, எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குடைய வனாய் வாழ்ந்து வந்த இப்பெருங்குண வேந்தன் வைணவர் கட்கும் திருமால் கோயிலுக்கும் தீங்கிழைத்தான் என்று கூறுவது சிறிதும் பொருந்தாது. அன்றியும் வைணவ நூல்களில் குறிப்பிடப் பெற்றுள்ள இராமாநுசர், அதிராசேந்திர சோழனுக்குக் காலத்தால் மிகப் பிற்பட்டவர் ஆவர். ஆதலால், இவ்வேந்தன் காலத்தில் அந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்று கொள்வதும் ஏற்புடைத்தன்று. எனவே, வைணவர்களால் உள்நாட்டில் ஏற்பட்ட கலகத்தில் இவ்வரசன் கொல்லப் பட்டான் என்று கருதுவதற்குச் சிறிதும் இடமில்லை என்பது உணரற்பாலதாகும்.

இனி, முதற் குலோத்துங்க சோழன், தான் சோழ நாட்டைக் கவர்ந்துகொள்ளும் பொருட்டு உள்நாட்டில் கலகம் நிகழுமாறு செய்து அதில் அதிராசேந்திரனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.1 தம் வரலாற்று நூலின் தலைவனாகிய சளுக்கிய விக்கிர மாதித்தனைப் புனைந்துரை வகையில் பல படப் பாராட்டியும் அதற்கு முரணாக முதற் குலோத்துங்க சோழனுடைய ஆற்றல் வீரம் முதலானவற்றைக் குறைத்தும் குணஞ் செயல்களை இழிவுபடுத்தியும் கூறுவதையே தன் கொள்கையாகக் கொண்ட பில்ஹணர் என்னும் வடமொழிப் புலவர், அவன் அதிராசேந்திரனைக் கொன்று சோழ இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொண்டிருந்தால் அவன் செய்கையைத் தம் நூலிற் கூறாமற் போகார் என்பது ஒருதலை. இவன் உள்நாட்டுக் கலகத்தில் கொல்லப்பட்டான் என்று கூறும் அப்புலவர், அச்செய்கையைக் குறிப்பிடாமையொன்றே குலோத்துங் கனுக்கும் அதிராசேந்திரனுக்கும் எத்தகைய பகைமையும் இல்லை என்பதையும் அவனால் இவ்வேந்தன் கொல்லப்பட வில்லை என்பதையும் நன்கு புலப்படுத்தாநிற்கும். ஆகவே குலோத்துங்க சோழன் அதிராசேந்திரனைக் கொன்று சோழ நாட்டைக் கவர்ந்து கொண்டான் என்று கூறுவது எவ்வாற் றானும் பொருந்துவதன்று. இவன் நோய்வாய்ப்பட்டு இறந்தமை முன்னர் விளக்கப்பட்டுள்ளது.

1. Anual Report on Epigraphy for 1904, Page 11