உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருந் தொல்குடியினர் என்று ஓர் அறிஞர் கூறியிருப்பது' பொருத்தமுடையதேயாம்.

இராமாயண பாரத காலங்களிலும் இவற்றிற்கு முந்திய நாட்களிலும் இவர்கள் மிகச் சிறப்புடன் விளங்கியுள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அன்றியும், கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், மகத நாட்டில் செங்கோல் செலுத்திய அசோகச் சக்ரவர்த்தியின் ஆணையையுணர்த்தும் கல்வெட்டுக்களில் சோழரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டில் மேனாட்டினின்றும் தமிழ் நாடு போந்த யவன ஆசிரியனாகிய தாலமி என்பவனது வரலாற்றுக் குறிப்பிலும் மேனாட்டு வரலாற்று ஆசிரியன் ஒருவனால் அப்பழைய காலத்தில் எழுதப்பட்ட ‘பெரிப்ளஸ்' என்ற நூலிலும் இவர்களைப் பற்றிய உயரிய செய்திகள் காணப் படுகின்றன. எனவே, கிரேக்கரும் உரோமரும் மிக உயர்நிலையிலிருந்த நாட்களில் நம் சோழரும் அவர்களுடன் வாணிகத் தொடர் புடையவர்களாய்ப் பெருமையோடு வாழ்ந்து வந்தனர் என்பது தெள்ளிது.

இத்துணைத் தொன்மையும் சிறப்பும் வாய்ந்த சோழர் குடியினர் வளம் நிறைந்த சோழ மண்டலத்தைத் தமக்குரிய தாகக் கொண்டு பண்டைக்கால முதல் ஆட்சி புரிந்து வந்தமை பற்றி வளவர் என்றும் வழங்கப் பெற்றனர். இவர்களது நாடு, வானம் பொய்ப்பினும் தான் பொய்யாத காவிரியால் வளம் பெற்றுச் சிறப்பெய்தியிருந்தமையின், 'காவிரி நாடு' எனவும் 'பொன்னி நாடு' எனவும் அறிஞர்களால் பாராட்டப்பட்டது. நிலவளமும் நீர் வளமும் ஒருங்கே அமைந்துள்ளமையால் இதன் நெல் விளைவு எந்த நாட்டினரும் புகழ்ந்து கூறும் இயல்புடையதாகும்.

'நெல்லுடையான் நீர்நாடர் கோ'2 என்ற பழம் பாடற் பகுதியும், 'மேதக்க - சோழ வளநாடு சோறுடைத்து'” என்ற

1. திருக்குறள் - குடிமை 5, பரிமேலழகர் உரைக் குறிப்பு.

2. யாப்பருங்கல விருத்தி, ப. 229.

3. திரு. மு. இராகவய்யங்கார் அவர்களது பெருந்தொகை

ப. 494.