உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

5

ஒளவைப் பிராட்டியாரது திருவாக்கும் ஈண்டு நோக்கற்பால வாகும். நெல்லுடைமையால் குடியுயர்தலும் குடியுயர்தலால் கோன் உயர்தலும் இயல்பே யாம். ஆகவே, 'வளவனாயினும் அளவறிந்தழித்துண்' என்னும் முதுமொழியில் செல்வத்தின் மேல் எல்லைக்கோர் எடுத்துக் காட்டாகச் சோழர் குடியினர் கூறப்பெற்றிருப்பது உணரற் பாலதாகும். சுருங்கச் சொல்லு மிடத்து, செல்வ வளம் பற்றி மூவேந்தருள்ளும் முதல் வேந்த ராய்த் திகழ்ந்தவர் இவர்களே எனலாம்.

2

சோழர் குடியினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும்.1 செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் அங்ஙனமே அறிவிக்கின்றன. இவர்களது கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்தி மாலையே இவர்கட்குரிய அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இவர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்தும் பேறு பெற்ற திருவுடைய நகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையாறைநகர் என்பன. இவற்றுள், உறையூரும் காவிரிப் பூம்பட்டினமும் சங்ககாலச் சோழ மன்னர் கட்குத் தலைநகரங்களாக விளங்கிய சிறப்புடையவை; தஞ்சாவூரும் கங்கைகொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழ அரசர்கட்குத் தலைநகரங்களாக விளங்கிய பெருமை வாய்ந்தவை; பழையாறை நகர், சோழர் பல்லவர்க்குக் கீழ்ச் சிற்றரசராயிருந்த காலப் பகுதியில் வாழ்ந்து வந்த இடமாகும். பிற்காலச் சோழர் ஆட்சிக் காலத்தும் இம்மாநகர் சோழரது இரண்டாவது தலைநகராய்ச் சிறப்புடன் நிலவியமை அறியற் பாலதாம்.

1.

மணிமேகலையின் பதிகம், வரிகள் 9 - 12.

2. தொல். பொருள். புறத்திணையியல், சூ. 5.