உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

9

வாய்ந்த தொன்று. அந்நகரில் பண்டைச் சோழரது அரண்மனை யிருந்த இடம் இக்காலத்தில் சோழ மாளிகை என்ற பெயருடன் ஒரு தனி ஊராக உளது. அதனைச் சுற்றி நாற்புறத்திலும் ஆரியப் படைவீடு, பம்பைப்படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு என்ற நான்கு பெரும்படைவீடுகள் அக்காலத்தில் சோழ மன்னர்களால் அமைக்கப்பட்டிருந்தன. அவை நான்கும் இந்நாளில் தனித்தனி ஊர்களாக உள்ளன. பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த விசயாலய சோழன் வழியினரும் அப்பழையாறை நகரைத் தமக்குரிய இரண்டாவது தலைநகராகக் கொண்டது அதன் தொன்மைத் தொடர்பு நோக்கியேயாம். இரண்டாம் பராந்தகன், கங்கைகொண்ட சோழன் முதலானோர் அம் மாநகரில் பல நாட்கள் தங்கியிருந்தமையும் அறியத்தக்கது. கி. பி. பத்து, பதினொன்றாம் நூற்றாண்டுகளில் சோழ அரச குடும்பத்தினருள் சிலர் அங்கு வாழ்ந்துவந்தனர் என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகின்றது'. எனவே, அது சோழரது பழைய நகரங்களுள் ஒன்றாயிருத்தல் வேண்டும் என்பது வெளியாதல் காண்க. அந்நகரில்தான், பல்லவர் காலத்தில் குறுநில மன்னராயிருந்த சோழர் இருந்தனர் என்பது கண்டு உணரற்பாலதாகும்.

சமயகுரவராகிய சுந்தரமூர்த்திகள் கூறியுள்ள கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர் என்பார்கி. பி. ஆறாம் நூற்றாண்டிலாதல் அதற்கு முன்னராதல் இருந்திருத்தல் வேண்டும். அவரைப் பற்றிய தெளிவான செய்திகள் கிடைக்கவில்லை.

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடையில் பாண்டி மண்டலத்தில் மதுரை மாநகரிலிருந்து ஆட்சிபுரிந்தவனும் அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவனும் சுந்தரமூர்த்தி களால் 'நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்' என்று திருத்தொண்டத் தொகையில் பாராட்டப்பெற்றவனும் ஆகிய பாண்டியன் அரிகேசரி மாறவர்மன் மனைவி மங்கையர்க்கரசி, ஒரு சோழமன்னன் மகள் ஆவள். இதனை, 'மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக்கை மடமானி - பங்கயச்

1. Ins 249 of 1923; S. I. I., Vol. III, No. 205.

2. திருத்தொண்டத்தொகை - பாடல். 8.