உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

செல்வி பாண்டிமாதேவி' என்னும் திருஞான சம்பந்தர் அருட்பாடலால் நன்கறியலாம். மங்கையர்க்கரசியின் தந்தை மணிமுடிச் சோழன் என்னும் பெயரினன் என்பது அவ்வடிகள் திருவாக்கினால்' உணரப்படுகின்றது. ஆகவே, கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மணிமுடிச்சோழன் என்ற மன்னன் ஒருவன் சோழநாட்டில் இருந்தனன் என்பது பெறப் படுதல் காண்க.

கி. பி. எட்டாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் சுந்தர மூர்த்திகள் சேரமான் பெருமாளுடன் மதுரைமாநகருக்குச் சென்றபோது, அவர்களைப் பாண்டிவேந்தன் ஒருவனும் அந்நகரில் முன்னரே போய்த் தங்கியிருந்த அவன் மருமகன் சோழமன்னன் ஒருவனும் எதிர்கொண்டழைக்க, எல்லோரும் சோமசுந்தரக் கடவுள் திருக்கோயிலுக்குச் சென்றார்கள் என்று பெரியபுராணம்; கூறுகின்றது. அன்றியும், சுந்தரமூர்த்திகள் மதுரையம்பதிக்கு அண்மையிலுள்ள திருப்பரங்குன்றத்திற்குச் சென்று, அங்குத் தாம் பாடிய பதிகத்தின் இறுதிப் பாடலில் அதனைச் சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர் முன்னே பாடியதாகக் கூறியுள்ளனர். அடிகள் குறிப்பிட்டுள்ள சேரர், சேரமான் பெருமாள் நாயனார் என்பதும், சோழன், பாண்டியன் மகளை மணந்து மதுரையில் அப்போது தங்கியிருந்த ஒரு சோழ அரச குமாரன் என்பதும், பாண்டியன், கி. பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மதுரையிலிருந்து ஆட்சி புரிந்து கொண்டிருந்த பாண்டியன் கோச்சடையன் ரணதீரன் என்பதும் ஆராய்ச்சியால் புலப்படுகின்றன.

1.

திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவாரம் - திருவாலவாய் - 1

2. மேற்படி, பாடல் - 6

3. சேரமான் தோழருமச் சேரர்பிரா னும்யணிப்பூண்

ஆரமார் பரைமதுரை ஆலவா யினில்வணங்க

வாரமா வந்தணைய வழுதியார் மனக்காதல்

கூரமா நகர்கோடித் தெதிர்கொண்டு கொண்டு கொடுபுக்கார்

(கழறிற் புரா.91)

தென்னவர்கோன் மகளாரைத் திருவேட்டு முன்னரே

தொன்மதுரை நகரின்கண் இனிதிருந்த சோழனார் அன்னவர்கள் உடன்கூட அணையவவ ருங்கூடி மன்னுதிரு ஆலவாய் மணிக்கோயில் வந்தணைந்தார்

சுந்தரமூர்த்திகள் திருப்பரங்குன்றப் பதிகம் - பா. 11.

(மேற்படி-92)