உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம்-1

15

தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் காலத்திலிருந்ததாக வேலூர்ப் பாளையச் செப்பேடுகளால் அறியக்கிடக்கும் குமாராங்குசன்' என்ற சோழ மன்னனுக்கு இவன் புதல்வனாயிருத்தல் வேண்டும் என்று எண்ணப்படுகின்றது. எனினும், இதனை ஒரு தலையாகத் துணிதற்கேற்ற ஆதாரங்கள் இப்போது கிடைத்தில. இவ் விசயாலயன் வழியினரான பிற்காலச் சோழமன்னர் ஆட்சிக் காலங்களில் வரையப் பெற்ற அன்பிற் செப்பேடுகளும் ஆனை மங்கலச் செப்பேடுகளும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும்" கன்னியாகுமரிக் கல்வெட்டும்' கடைச்சங்க காலத்திற் புகழுடன் விளங்கிய பெருநற்கிள்ளி, கரிகாலன், செங்கணான், நல்லடி என்னும் சோழ அரசர்களின் வழியில் தோன்றியவன் விசயாலயன் என்று உறுதியாகக் கூறுகின்றன. இச்செய்தி புனைந்துரை என்று எண்ணுவதற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும், அக்காலத்தி லிருந்த சோழ மன்னர்கள், தாம் கடைச் சங்ககாலத்துச் சோழரின் வழித்தோன்றல்கள் என்பதைத் தெளிவாக உணர்ந் திருந்தனர் என்பது மேலே குறிக்கப்பட்டுள்ள அவர்கள் செப்பேடுகளாலும் கல்வெட்டினாலும் நன்கறியக் கிடக்கின்றது.

சங்ககாலச் சோழரின் வழியினரே கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழர் பேரரசு நிறுவிப் புகழோடு ஆட்சிபுரியத் தொடங்கியவர்கள் என்பது ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலாக்களினாலும் இனிது பெறப்படுகிறது. இச்செய்தி, கவிச்சக்கரவர்த்தியாகிய சயங்கொண்டாரது கலிங்கத்துப் பரணியாலும்' உறுதியெய்துகின்றது. ஆகவே, கடைச்சங்க காலத்துச் சோழரின் வழியில் தோன்றியவனே விசயாலயன் என்பது தெள்ளிதின் விளங்குதல் காண்க.

1. S. I. I., Vol. II, No. 98.

2. Epigraphia Indica., Vol. XV. No. 5.

3. Ibid., Vol. XXII No. 34 (The Larger Leiden Plates)

4. S. I. I., Vol. III. No. 205.

5. Travancore Archaelogical Series, Vol. III No. 34.

6. (1) விக்கிரம சோழனுலா. வரிகள் 25 முதல் 32 முடிய.

(2) குலோத்துங்க சோழனுலா, வரிகள் 35 - 46

(3) இராசராச சோழனுலா, வரிகள் 29 - 40

7. கலிங்கத்துப்பரணி, பாடல்கள், 197-200.