உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

21

தமையோடு தன் படை வலியைப் பெருக்கிக் கொண்டும் வந்தான். அக்காலத்தில் சோழ மண்டலத்துள் ஒரு பகுதியை ஆட்சி புரிந்து கொண்டிருந்த விசயாலய சோழன் முதுமை எய்தி வலிகுன்றியிருந்தான். அம்மண்டலத்தின் மற்றொரு பகுதியையும் தொண்டை நாட்டையும் ஒருங்கே அரசாண்டு கொண்டிருந்த பல்லவ வேந்தனாகிய நிருபதுங்க வர்மனும் இறக்கவே, அவன் புதல்வன் அபராஜித வர்மன் முடிசூடி ஆட்சியைக் கைக் கொண்டான். இரண்டாம் வரகுண பாண்டியன், தன் கருத்தை நிறைவேற்றுவதற்கு அதுவே தக்க காலம் என்று கருதி, கி. பி. 880 - ஆம் ஆண்டில் பெரும் படையைத் திரட்டிக்கொண்டு சோணாட்டிற் புகுந்தான். அந்நாட்டில் காவிரியாற்றிற்கு வடக்கேயுள்ள மண்ணி நாட்டு நகரங்களுள் ஒன்றாகிய இடவை வரகு பாண்டியனால் தாக்கப்பட்டது. அங்கு நிகழ்ந்த போர் நிகழ்ச்சிகளை விளக்கமாக அறிதற்கியலவில்லை. விசயாலயன் புதல்வனாகிய முதல் ஆதித்த சோழன் சோழன் அந்நாட்களில் இளவரசனாக இருந்தமையின் அவன் வரகுண பாண்டியனை எதிர்த்து இடவையில் போர் புரிந்திருத்தல் கூடும். அவன் பிற வேந்தர் உதவியின்றித் தனியே பாண்டிப் பெரும் படையை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றி பெறுவதும் எளிதன்று. எனவே, வரகுண பாண்டியன் படையெழுச்சியினால் சோணாடு பல இன்னல்களுக்கு உட்பட்டிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். சோழ மண்டலத்தின் மற்றொரு பகுதி அபராஜித வர்மன்

1. இடவை என்ற ஊர் தற்காலத்தில் அப்பகுதியில் காணப்படவில்லை. எனவே, அது வேறு பெயரோடு இந்நாளில் வழங்கப்படுகிறது போலும், கும்பகோணத்திற்கு வடகிழக்கேயுள்ள திருவியலூர், வேப்பத்தூர், திரைலோக்கி, திருக்குடித்திட்டை, இடையார்நல்லூர், திருப்பனந்தாள் முதலான ஊர்கள் மண்ணிநாட்டில் உள்ளவை என்பது கல்வெட்டுக்களால் புலப்படுகிறது, (S. I. I., Vol. II, Introduction, p. 23.) ஆகவே, இடவையும் கும்பகோணம் தாலூகாவில் அவ்வூர்கட்கு அண்மையில்தான் இருந்திருத்தல் வேண்டும். சிலர், இடவை என்பது இடை மருது என்பதன் மரூஉ என்றும் ஆகவே அது திருவிடைமருதூராக இருத்தல் வேண்டும் என்றும் எழுதியுள்ளனர் (Journal of Sri Venkateswara Oriental Institute, Vol. IV. p, 168) அன்னோர் கொள்கை தவறாகும். அப்பரடிகள் தம் க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை' என்று கூறியிருத்தலால் இடை மருதும் இடவையும் வெவ்வேறு ஊர்களாதல் அறிக. அன்றியும் இடவை என்பது காவிரியாற்றிற்கு வடக்கே இராசேந்திர சிங்க வளநாட்டில் திரைமூர் நாட்டிலுள்ள ஓர் ஊர் என்பதும் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன, (S. I. I., Vol. II, p. 331. S. I. I, Vol. V, No. 706) ஆகவே, இவ்விரண்டும் வெவ்வேறு ஊர்கள் என்பது கல்வெட்டுக்களாலும் உறுதியாதல் காண்க,