உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 நிலையே எனலாம். இவன் புதல்வன் முதல் ஆதித்தன் இப்போரில் கலந்து கொண்டு பாண்டியனுடன் பொருத செய்தி முன்னர் விளக்கப் பட்டது. இவன் காலத்துக் கல்வெட்டுக்கள் மிகுதி யாகக் கிடைக்காமையின் இவனைப் பற்றிய பிற செய்திகள் தெரியவில்லை.

புதுக்கோட்டை இராச்சியத்தில் நார்த்தாமலை என்ற ஊருக்குத் தென்மேற்கேயுள்ள ஒரு குன்றின்மேல் விசயாலய சோழேச்சுரம் என்ற கற்றளி ஒன்றுளது'. அது விசயாலய சோழன் எடுப்பித்த கோயிலாக இருத்தல் வேண்டும். சோழ நாட்டில் விசயாலய சோழச் சதுர்வேதிமங்கலம் என்ற ஊர் ஒன்று இவ்வேந்தன் பெயரால் அமைக்கப்பட்டிருந்தது என்பது தஞ்சைப் பெரிய கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டால் புலனாகின்றது". அன்றியும், சோழிய வளாகம் என்ற ஊர் விசயாலயநல்லூர் என்ற பெயருடன் முற்காலத்தில் நிலவியது என்று அவ்வூரிலுள்ள ஒரு கல்வெட்டு உணர்த்துகின்றது'. இவையெல்லாம் சோழ நாட்டிலும் பிற நாட்டிலும் இவ்வேந்தனது ஆட்சி பரவியிருந்த இடங்களை நன் குணர்த்துவனவாகும்.

-

தன் வாணாள் முழுமையும் போர் புரிந்து சோழர் பேரரசிற்கு அடிகோலிய விசயாலய சோழன் கி.பி. 881 ஆம் ஆண்டில் விண்ணுலகடைந்தான். இவன் பட்டத்தரசியைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவனுக்கு ஆதித்த சோழன் என்ற புதல்வன் ஒருவன் உண்டு என்பது முன்னர்க் கூறப்பட்டது. இவன் தான் இறப்பதற்குப் பத்து ஆண்டுகட்கு முன்னரே கி. பி. 871 - ல் தன் புதல்வனுக்கு இளவரசுப் பட்டங்கட்டி அரசியலில் ஈடும்படும் படி செய்திருந்தான் என்பது கல்வெட்டுக்களால் அறியப்படு கின்றது.

1. Inscriptions of the Pudukkottai State, No. 282.

2. S. I. I., Vol. II. No. 69.

3. Ins. 122 of 1931 - 32

4. Ep. Ind.. Vol. XXVI, page 233.