உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

27

அன்றியும், பல்யானைக் கோக்கண்டனான ஆதித்த சோழனும் சேரமான் தாணுரவியும் அந்நாளில் உற்ற நண்பர் களாக இருந்தனர் என்பதும் இருவரும் சேர்ந்து விக்கியண்ணன் என்ற தலைவன் ஒருவனுக்கு அவன் புரிந்த அருந்தொண்டைப் பாராட்டிச் ‘செம்பியன் தமிழவேள்' என்ற பட்டமும் தவிசும் சாமரையும் சிவிகையும் திமிலையும் கோயிலும் இறையிலி நிலமும் எக்காளமும் களிற்று நிரையும் வழங்கினார்கள் என்பதும் அத்திருநெய்த்தானக் கல்வெட்டால் வெளியாகின்றன. சோழ மன்னனும் சேர மன்னனும் ஒருங்கு சேர்ந்து பட்டம் வழங்கிப் பாராட்டுமாறு விக்கியண்ணன் புரிந்த அரிய தொண்டு யாது என்பதை அக்கல்வெட்டு அறிவிக்கவில்லை. எனினும், அவனுக்கு வழங்கப்பெற்ற பட்டம் 'செம்பியன் தமிழவேள்' என்று சொல்லப் படுவதால் அவன் ஆதித்தனுக்கு உதவி புரிந்தமை பற்றி அப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். அங்ஙனமாயின், ஆதித்தன் போர்புரிந்து தொண்டைமண்டலத்தை யாதல் கொங்குமண்டலத்தையாதல் கைப்பற்றிய காலத்தில் விக்கியண்ணன் என்ற தலைவன் படையுடன் வந்து இவனுக்குச் சிறந்த உதவிபுரிந்திருத்தல் வேண்டும் என்பது திண்ணம்.

இனி, ஆதித்தன் கொங்கு மண்டலத்தின் மீது படை யெடுத்துச் சென்று அதனைக் கைப்பற்றிக்கொண்டான் என்று 'கொங்கு தேச இராசாக்கள்' என்ற வரலாற்று நூல் கூறுகின்றது. அந்நூல் கூறுவது 'சோழ வம்சத்திலே விசயாடராயன் மகன் ஆதித்தவர்மராயன் சோழதேசம் தஞ்சாவூரிலே பட்டங் கட்டிக் கொண்டு கொங்க தேசத்துக்கு வந்து ராசா வேடர்களைச் செயம் பண்ணித் தலைக்காடு என்ற பட்டணங்கட்டிக்கொண்டு இந்த

ராச்சியங்களிலேயே அநேக அக்கிரகாரம் சர்வமானியமாய்த் தருமம் பண்ணி அந்த அரசை ஆண்டனன்' - என்பதாம். ஆதித்தனது கல்வெட்டுக்கள் கொங்கு நாட்டில் காணப்படாவிட்டாலும் இவன் மகன் முதற் பராந்தகச் சோழனுடைய கல்வெட்டுக்கள் அவனது ஆட்சியின் தொடக்கத்திலேயே அந்நாட்டில் உள்ளன.

1. செந்தமிழ்த் தொகுதி 16, பக். 394. இந்நூல் வரலாற்று ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படக்கூடிய ஓர் அரிய நூலாகும். இஃது ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் பதிப்பிக்கப் படவேண்டும்.

2. The Cholas, Vol.I p. 138.