உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

41

னி, பராந்தகனது ஆட்சியின் 34 ஆம் ஆண்டாகிய கி.பி. 941-ல் இவன் படைத் தலைவன் சிறுகுளத்தூர் மாறன் பரமேசுவரனான செம்பியன் சோழியவரையன் என்பவன் சீட்புலியைவென்று நெல்லூரையும் அழித்துத் திரும்புங்கால் தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூரில் தங்கி, அவ்வூர்க் கோயிலில் நாள்தோறும் நுந்தாவிளக்கு எரிப்பதற்குச் சாவா மூவாப் பேராடுகள் தொண்ணுறு வைத்து வந்தான் என்று அங்குள்ள கல்வெட்டு ஒன்று கூறுகின்றது. சீட்புலி என்பது நெல்லூர் ஜில்லாவில் வட பகுதியிலிருந்த ஒரு நாடு. அந்நாளில் அது கீழைச் சளுக்கிய இராச்சியத்தின் தென் பகுதியிலிருந்தது என்று தெரிகிறது. எனவே, கீழைச் சளுக்கிய மன்னனாகிய இரண்டாம் வீமனை வென்றடக்கும் பொருட்டு அப்படை யெழுச்சி நிகழ்ந்திருத்தல் வேண்டும். அப்படை யெழுச்சியினால், சீட்புலி நாடும் நெல்லூரும் பராந்தகன் ஆட்சிக்குட்பட்டுப் போயின என்று கூற முடியவில்லை. அஃது எங்ஙனமாயினும், தென்குமரி முதல் நெல்லூர் ஜில்லாவின் வட எல்லை வரையிலும் பராந்தகனது ஆற்றலும் வீரமும் பரவியிருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.

இவன், தன் இராச்சியத்தை இங்ஙனம் உயர்நிலைக்குக் கொண்டுவந்து தன் வீரமும் ஆணையும் யாண்டும் பரவ ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் காலத்தில் வடபுறத்தில் பெருவேந்த ராயிருந்து அரசாண்டவர் இராஷ்டிரகூட மரபினர் ஆவர். இராஷ்டிரகூட மன்னனாகிய இரண்டாம் கிருஷ்ண தேவன், தன் மகள் இளங்கோப்பிச்சியை முதல் ஆதித்த சோழனுக்கு மணம் செய்து கொடுத்த செய்தி முன் கூறப்பட்டது. எனவே, ஆதித்தன் காலத்தில் சோழரும் இராஷ்டிரகூடரும் நெருங்கின உறவினாற் பிணிக்கப்பட்டிருந்தனர் என்பது தேற்றம். கி. பி. 915 -ஆம் ஆண்டின் இறுதியில் இராஷ்டிரகூட வேந்தன் இரண்டாம் கிருஷ்ணன் இறக்கவே, அவன் பேரன் மூன்றாம் இந்திரன் என்பான் அரசுகட்டில் ஏறினான்". அவ்விந்திரனுக்கு நான்காம்

1. S. I. I., Vol. III, No. 108.

2. Ins. 79 of 1921.

3. The Cholas Vol. I, Page 153.

4. The Rashtrakutas & Their Times, pp. 99 and 100.