உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

போக்கில் நிகழ்வனவற்றை இவ்வுலகில் யாவர் தாம் தடுக்க முடியும்? ஆகவே, காலச் சக்கரத்தின் சுழற்சியினால் நிகழ்வன நிகழ்ந்தே தீரும் என்பது ஒரு தலை. எத்தகைய பேரறிவும், பேராற்றலும் சூழ்ச்சித் திறனும் ஊழால் நிகழ்வனவற்றை ஒரு காலும் வெல்லமாட்டா என்பது தெளிவு.

இனி, இராஷ்டிரகூட மன்னனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவன், தன் தந்தை இறந்த பிறகு முடி சூட்டுவிழா நடத்து வதற்குக் கி. பி. 940 -ல் ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, பராந்தகச் சோழன் இரட்ட மண்டலத்தைக் கைப்பற்றித் தன் மருகன் நான்காம் கோவிந்தனுக்கு அளிக்கும் பொருட்டுப் படையெடுத்துச் சென்றமையை அவ்வேந்தன் சிறிதும் மறந் தானில்லை. எனவே, தக்க படை வலிமையுடன் சென்று சோழ இராச்சியத்தைத் தாக்கிப் பராந்தகனுக்குத் தன் ஆற்றலைப் புலப்படுத்துவதோடு இடையூறு புரிதலும் வேண்டும் என்பது அவன் உள்ளத்தில் ஊன்றிக் கிடந்ததோர் எண்ணமாகும். அவ்வெண்ணத்தை நிறைவேற்றிக் கோடற் பொருட்டுச் சுமார் எட்டு ஒன்பது ஆண்டுகள் வரையில் அவன் தன் படைகளைப் பெருக்கிக் கொண்டே வந்தான். இறுதியில் கி. பி. 949 ஆம் ஆண்டில், அவன் சோழ இராச்சியத்தின்மீது படை யெடுத்தான்'. அந்நாளில், கங்க மன்னனாகிய இரண்டாம் பூதுகனும் பெரும்படையோடு அவனுக்கு உதவி புரிய வந்தான். எனவே, இராஷ்டிரகூடப் படையும் கங்கப்படையும் ஒருங்கு சேர்ந்து சோழ இராச்சியத்தின் வட பகுதியிலிருந்த தொண்டை நாட்டைத் தாக்கின. அந்நாளில், திருநாவலூரில் படையுடன் தங்கியிருந்த இளங்கோவாகிய ராசாதித்த சோழன், வடவேந்தர் படையெடுப்பைத் தடுத்துப் போர் புரியத் தொடங்கினான். வட ஆர்க்காடு ஜில்லாவில் அரக்கோணத்திற்குத் தென்கிழக்கே ஆறு மைல் தூரத்திலுள்ள தக்கோலம் என்ற ஊரில் இரு பெரும் படைகளும் கடும்போர் புரிந்தன'. இருபக்கத்திலும் பல்லாயிரம் வீரர்கள் உயிர் துறந்தனர். போர் மிகக் கடுமையாக நடைபெற்றதாயினும், சோழ நாட்டுப் 1. The Rashtrakutas and their Times, Pages 116 and 117.

2. Ibid, p. 118.

3. Ibid, p. 117.