உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

வருவதற்குச் சில ஆண்டுகள் சென்றிருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. இப்போர் நிகழ்ச்சிக்குப் பின்னர், முதற்பராந்தக சோழனது கல்வெட்டுக்கள் அந்நாடுகளில் யாண்டுங் காணப் படவில்லை. ஆகவே, இப்போரின் பயனாக அந் நாடுகளை இவன் இழந்துவிட்டான் என்பதில் ஐயமில்லை. ஆனால், இராஷ்டிரகூட வேந்தனாகிய மூன்றாங் கிருஷ்ண தேவன் கல்வெட்டுக்கள் அவனது ஆட்சியின் 15 - ஆம் ஆண்டாகிய கி.பி. 955 முதல் தான் அந்நாடுகளில் காணப் படுகின்றன. ஆகவே, கி. பி. 949 முதல் 955 வரையில் அவன் அந்நாடுகளைத் தன் ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுச் சிறிது சிறிதாக அதில் வெற்றியும் பெற்றனன் எனலாம்.

-

திருமுனைப்பாடி நாட்டில் கி. பி. 953, 954 - ஆம் ஆண்டு களில் குறுநில மன்னனாகவிருந்து அரசாண்டு கொண்டிருந்த முனையதரையன் குலமாணிக்கன் இராமதேவன் என்பான், தன் பேரரசன் பெயரைக் குறிப்பிடாமல் திருநாம நல்லூர்க் கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் பொறித் துள்ளான்'. அத்தலைவன், அவ்வாண்டுகளில் பழைய சோழர்க்குத் திறை கொடாமலும் புதிய இராஷ்டிர கூடர்க்குத் தலை வணங்காமலும் சுயேச்சை யாகத் தன் நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்தனன் என்பது அக்கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. தக்கோலப் போரில் வெற்றி பெற்ற மூன்றாங் கிருஷ்ணதேவன், உடனே அந்நாடு முழுவதையும் தன் ஆட்சிக்குக் கொண்டுவர இயலவில்லை என்பது இதனால் நன்கு புலப்படுகின்றது. ஆகவே, கி. பி. 949 -க்கும் கி. பி. 955 -க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெள்ளாற்றிற்கு வடக்கேயுள்ள திருமுனைப்பாடி நாட்டிலும் அதற்கு வடபால் அமைந்துள்ள தொண்டை நாட்டிலும் பேரரசின்மை அறியற் பாலதாம். கி. பி. 955 முதல் கி. பி. 968 வரையில் அவ்விரு நாடுகளும் மூன்றாங் கிருஷ்ணதேவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என்பது அந் நாடுகளில் காணப்படும் அவ்வேந்தன் கல்வெட்டுக் களால் அறியக்கிடக்கின்றது.

1. S.I. I., Vol. VII, No. 37; Ibid, Vol. III, No. 7; Ibid, Vol. VIII, No. 301

2. Ep. Ind., Vol. VII, pp. 136 and 137.

3.S.I.I., Vol. VII, Nos. 111 799, 802, 803,894, 899 and 994; Ep. Ind., Vol. III, No.38.C and D; S. I. I., Vol. VI, Nos. 324 and 374.

"