உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

49

இனி, சோழநாட்டில் அவன் கல்வெட்டுக்கள் யாண்டும் காணப்படவில்லை. ஆனால், அக்காலப்பகுதியில், முதற் பராந்தகன், முதற்கண்டராதித்தன், இரண்டாம் பராந்தகன் என்ற சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களே அந்நாடெங்கும் வரையப் பெற்றிருக்கின்றன. இவற்றால், சோழநாடு மாத்திரம் இராஷ்டிரகூட மன்னனது ஆட்சிக்குட்படாமல், சோழ மன்னர் களின் ஆளுகையிலேயே அக்காலப் பகுதியில் அமைந் திருந்தது என்பது தெளிவாக விளங்குதல் காண்க.

இஃது இங்ஙனமாக, சில கல்வெட்டுக்கள், மூன்றாங் கிருஷ்ண தேவனைக் 'கச்சியுந் தஞ்சையுங்கொண்ட கன்னர தேவன்' என்று குறிப்பிடுகின்றன'. அன்றியும், மூன்றாங் கிருஷ்ண தேவனது கார்காட் செப்பேடுகள், அவன் சோழரை வென்று, அன்னோரது நாட்டைத் தன்னுடன் வந்த தலைவர்கட்கு அளித்ததோடு இலங்கை வேந்தன் முதலான அரசர்கள்பால் கப்பம் பெற்று இராமேச்சுரத்தில் வெற்றித்தூண் ஒன்று நிறுவினான் என்றும் கூறுகின்றன'. புதுச்சேரிக் கண்மையிலுள்ள வாகூருக்கும் தென்னார்க்காடு ஜில்லாவில் பண்ணுருட்டிக் கருகிலுள்ள திருவதிகை வீரட்டானத்திற்கும் தெற்கே மூன்றாங் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்கள் எவ்விடத்தும் காணப் படாமையால், அவன் தஞ்சையைக் கைப்பற்றியமையும் பிறவும் வெறும் புனைந்துரைகளேயன்றி உண்மைச் செய்திகள் ஆகமாட்டா. அவன், தன்னுடன் வந்த சில தலைவர்கட்குச் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டை நாட்டிலும் திருமுனைப்பாடி நாட்டிலும் சில பகுதிகளைக் கொடுத் திருத்தல் கூடும். எனவே, அவன் தக்கோலத்தில் சோழரை வென்று அவ்விரு நாடுகளையும் கைப்பற்றித் தன் ஆட்சிக் குள்ளாக்கிய வரலாற்றையே அச்செப்பேடுகள் மிகைப்படுத்திக் கூறுகின்றன என்பது தெள்ளிது. ஆயினும், இப்போர் நிகழ்ச்சியால் சோழ இராச்சியம் சுருங்கிய நிலையை எய்திற்று எனலாம். சோழர் பேரரசும் தன் உயர் நிலையினின்றும் சிறிது வீழ்ச்சியடைந்தது என்பதில் ஐயமில்லை.

1. Ins. 465 of 1918; S. I. I., Vol. III, Nos. 111, 112, 119, 120, 121 and 122. 2. S. I. I., Vol. VI, Nos. 362, 324 and 374. Ep. Ind., Vol. III, pp. 284 and 285. 3. Ep. Ind., Vol IV, p. 280.