உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

57

சந்தல் என்ற ஊரில் இவன் பெயரால் கண்டராதித்தப் பெரும் பள்ளி என்னும் அமண்பள்ளியொன்று காணப்படுவதும் இவன் புறச் சமயத்தினரையும் நன்கு மதித்து அவர்கள்பால் அன்புடன் ஒழுகியவன் என்பதை இனிது விளக்குவனவாகும். எனவே, இவ்வேந்தன்,

'விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து

எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்’2

என்ற திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாக்கின் உண்மையைத் தெள்ளிதின் உணர்ந்து, அதனைத் தன் வாழ்க்கையில் உறுதி யாகக் கடைப்பிடித்தவன் என்பது சிறிதும் புனைந்துரை யாகாதென்க.

இனி, இவ்வரசன் இரு மனைவியரை மணந்தவன் என்பது து கல்வெட்டுக்களால் புலனாகின்றது. அவ்வரசியர், வீரநாரணி, செம்பியன்மாதேவி என்போர். அவர்களுள் வீரநாரணியே முதல் மனைவியாவள்'. கண்டராதித்தன் முடிசூட்டப் பெறுவதற்கு முன்னர் அவ்வம்மை இறந்தனள் என்று தெரிகிறது. மற்றொரு மனைவியாகிய செம்பியன்மாதேவி, மழநாட்டுச் சிற்றரசன் ஒருவன் மகள் என்பது 'மழவரையர் மகளார் ஸ்ரீகண்டராதித்தப் பெருமாள் தேவியார் செம்பியன் மாதேவியார், என்ற கல்வெட்டுப் பகுதியால் நன்கறியக் கிடக்கின்றது". அவ்வரசியும் தன் கணவனைப்போல் மிகுந்த சிவபக்தியுடையவள். அவ்வம்மை, தன் கணவன் இறந்த பின்னர், கி.பி.1001-ஆம் ஆண்டு வரையில் உயிருடனிருந்தனள் என்பது விருத்தாசலம், திருவக்கரை ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுக்களால் புலப்படுகிறது. எனவே அவள் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனள் என்பது தேற்றம். தன் நீண்ட வாழ்நாளில் அம்மாதேவி புரிந்துள்ள அறங்கள் மிகப் பலவாம். அவையெல்லாம் உத்தம சோழன் ஆட்சியில் நன்கு விளக்கப்படும்.

1. Ins. 448 of 1938.

2. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் - திருப்பெருவேளூர் - பா. 9.

3. Ins. 108 of 1906.

4.

S. I. I., Vol. III, No. 141.

5. Ins.48 of 1918; Ins. 200 of 1904.