உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

59

அங்ஙனம் போயிருத்தல் இயல்பேயாம். பங்களூர் ஜில்லாவிற் காணப்படும் கல்வெட்டொன்று' இவனைச் 'சிவஞான கண்டராதித்தர்' என்று குறிப்பிடுவதால் இவனுக்கும் மைசூர் இராச்சியத்தின் தென் பகுதியிலிருந்த கங்க நாட்டிற்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருந்திருத்தல் வேண்டும் என்பது நன்கு பெறப்படுகின்றது. அக்கல்வெட்டுச் சிதைந்திருத்தலால் இவனைப் பற்றி அஃது உணர்த்துஞ் செய்திகளை அறிய இயல வில்லை. எனினும் இவன் படைத்தலைவன் ஒருவன், அந்நாட்டு மழவூர்க் கோயிலில், கண்டராதித்தவிடங்கரையும் உமா பரமேசுவரியாரையும் எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளனன் என்பது அக் கல்வெட்டால் அறியக் கிடக்கின்றது. சோழ நாட்டிற்கு வட மேற்கில் அத்துணைச் சேய்மையிலுள்ள கங்க நாட்டில் கண்டராதித்த விடங்கர் எழுந்தருளுவிக்கப் பெற்றமைக்குத் தக்க காரணம் இருத்தல் வேண்டும் என்பது ஒருதலை.

2

இனி, மைசூர் இராச்சியத்தில் நந்தி என்னும் ஊரிலுள்ள ஒரு சிவன் கோயிலில் ஓர் அரசர் படிமம் உளது. அது சோழ மன்னரது படிமம் என்று அங்கு வழங்கப்படுகின்றது. அது யோகத்தில் வீற்றிருக்கும் நிலையில் அமைக்கப்பெற்றுள்ளது. கோனேரி ராசபுரத்திலுள்ள கண்டராதித்தன் படிமத்திற்கும் அதற்கும் வேறுபாடு மிகுதியாகக் காணப்படவில்லை. எனவே, அது நம் கண்டராதித்த சோழனை நினைவு கூர்தற்கு வைக்கப் பெற்ற உருவச் சிலையாதல் வேண்டும். ஆகவே, இச்செய்தி மேலே குறிப்பிட்ட வரலாற்றிற்குச் சான்றாக நிற்றல் காண்க.

சிவபக்தியும் தமிழ்ப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்ற இவ்வேந்தன் தான் வணங்கிய திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள இறைவன்மீது பல பதிகங்கள் பாடியிருத்தல் கூடும். அவற்றுள், கோயிற் பதிகம் ஒன்றே இந்நாளில் நமக்குக் கிடைத்துளது.

1. Ep. Car. Vol. IX, Chennapatinam No. 92. 2. Portrait Sculpture of South India, p. 29.