உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3

ஆட்சிக்குட் படுத்தி யிருந்த மூன்றாங் கிருஷ்ண தேவன், தன்பால் அடைக்கலம் புகுந்திருந்த வைதும்பராய மன்னனுக்கு அவற்றை யளித்துத் தன் பிரதிநிதியாகவிருந்து ஆண்டு வருமாறு ஏற்பாடு செய்திருந்தான். அவ்வேந்தனுக்குப் பிரதிநிதியாக அமர்ந்து மலாடு, வாணகோப்பாடி நாடு, சிங்கபுர நாடு என்பவற்றை முதலில் அரசாண்டவன் விக்கிரமாதித்த வைதும்ப மகாராசன் என்பது தென்னார்க்காடு ஜில்லாக் கீழுரிலுள்ள ஒரு கல்வெட்டினால் தெளிவாக அறியப்படுகிறது'. அவனுக்குப் பின்னர் வைதும்ப மகாராசன் திருவையனும் பிறகு அவன் மகன் ஸ்ரீகண்டனும் இராஷ்டிரகூட மன்னன் பிரதிநிதிகளாகவிருந்து அப்பகுதிகளில் ஆட்சி புரிந்தனர். அரிஞ்சயன் தான் வைதும்ப வேந்தரோடு போர் புரிந்து அந்நாடுகளைக் கைப்பற்ற வேண்டியிருந்தமையின், முதலில் தன் புதல்வி அரிஞ்சிகைப் பிராட்டியை ஒரு வாணர்குல மன்னனுக்கு மணஞ் செய்து கொடுத்து அக்குலத்தினர் உறவும் நட்பும் பெற்று அன்னோர்க்கு இராஷ்டிரகூடர்த் தொடர்பு அற்றுப் போகும்படி செய்து விட்டான்”. பின்னர், இவ்வேந்தன் சோழ இராச்சியத்தின் வடபகுதியாகத் தன் தந்தையின் காலத்திலிருந்த திருமுனைப் பாடி நாட்டையும் தொண்டை நாட்டையும் கைப்பற்று வதற்குப் பெரும் படையுடன் புறப்பட்டான். அப்போது நடைபெற்ற போர் நிகழ்ச்சிகளை அறிவிக்கும் கல்வெட்டுக்கள் இதுகாறும் கிடைத்தில. ஆனால், வட ஆர்க்காடு ஜில்லா விலுள்ள ஆற்றூரில் இவன் இறந்தனன் என்று தெரிகிறது. இவனை 'ஆற்றூர்த் துஞ்சின தேவர்" என்று சில கல்வெட்டுக்கள் கூறுவதால் இச் செய்தியை நன்கறியலாம். இவன் போரில் உயிர் துறந்தனனா அன்றி இயற்கையாகவே இறந்தனனா என்பது இப்போது புலப்படவில்லை. இத்தகைய ஐயப்பாடுகள் எல்லாம் எதிர்காலத்தில் கிடைக்கும் ஆதாரங்களால் நீங்கும் என்பது ஒருதலை.

1. Ins. 16 of 1905.

2. Ep. Ind., Vol. VII, pp. 142 - 44; Ins. 743 of 1905.

3. Ins. 215 of 1911.

4. S. I. I., Vol. III, Nos. 15-17.