உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 3 ஆண்டு முதல் பாண்டி நாட்டில் காணப்படுங் கல்வெட்டுக் களில் அவன் ‘சோழன் தலைகொண்ட கோ வீர பாண்டியன்' என்று பெருமையாகக் கூறப்பட்டுள்ளான்'. ஆகவே, கி. பி. 953- இல் சோழர்க்கும் வீர பாண்டியற்கும் நடைபெற்ற போர் ஒன்றில் பாண்டி வேந்தன் சோழன் ஒருவனைக் கொன்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். வீரபாண்டியன் கல்வெட்டுக்கள் சோழன் பெயரைக் குறிப்பிடாமல் பொதுவாகச் சோழன் என்று கூறுகின்றமையால் அவனால் போரில் கொல்லப்பட்டவன் சோழச் சக்ரவர்த்தி யல்லன் என்பதும் சோழர் குடியில் தோன்றிய ஓர் அரசகுமாரனாகவே யிருத்தல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். அவன் யாவன் என்பது இப்போது புலப்பட வில்லை. சோழ அரசகுமாரன் ஒருவனை வீரபாண்டியன் முன்னர் நிகழ்ந்த போரில் கொன்றமையாலும், அவனிடமிருந்து பாண்டிய நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் சுந்தர சோழன் உள்ளத்தில் பன்னாட்களாக நிலைபெற்றிருந் தமையாலும், இவன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். அந்நாட்டிலுள்ள சேவூரில் சுந்தர சோழற்கும் வீரபாண்டியற்கும் பெரும் போர் நடைபெற்றது. அப்போரில் சுந்தர சோழனே வெற்றி எய்தினான். தோல்வியுற்றுப் புறங் காட்டியோடிய பாண்டி மன்னன் சுரம் புகுந்து ஒளிந்து கொண்டான்'. அதுபற்றியே, சுந்தர சோழன் ‘பாண்டியனைச் சுரம் இறக்கின பெருமாள்' என்று வழங்கப் பெற்றனன். இவன் ஆட்சியின் ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுக்கள்' இவனை ‘மதுரை கொண்டகோ இராசகேசரிவர்மன்' என்று கூறுவதால் சேவூர்ப் போர் கி.பி.962-ஆம் ஆண்டில் நடைபெற்றிருத்தல் வேண்டும் என்பது தெள்ளிது. அப்போர் நிகழ்ச்சி ஆனை மங்கலச் செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது. அப்போரில் வீர பாண்டியனுக்கு உதவிபுரிதற் பொருட்டுச் சிங்கள நாட்டு மன்னன் நான்காம் மகிந்தன் என்பவன் பெரும் படையனுப்பி யிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1. S.I. I., Vol. V, No. 455.

2. Travancore Archaeological Series, Vol. III, No. 34, Verse 63.

3. S.I. I., Vol. III, Nos. 114, and 115.

4. Ep. Ind., Vol. XXII; No. 34, Verse 25.