உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 1

69

பக்கங்களில் உள்ளன'. இந்நிலையில் இராஷ்டிரகூட மன்னன் மூன்றாங் கிருஷ்ணதேவன் கல்வெட்டுக்களும் கி.பி. 967 வரையில் அந்த ஜில்லாக்களில் சில ஊர்களில் காணப்படுகின்றன. ஆகவே சுந்தரசோழன் அவ்விரு நாடுகளையும் கைப்பற்றுவதற்குச் செய்த முயற்சி சிறிது சிறிதாகச் சில ஆண்டுகளில் நிறைவேறியது போலும். அந்த நிகழ்ச்சிகளைக் கால வரையறையுடன் தெளிவாக அறிய இயலவில்லை. எனினும், கி. பி. 963 ஆம் ஆண்டிலேயே தொண்டைநாட்டுப் பகுதிகள் இவன் ஆட்சிக் குட்பட்டு விட்டன என்று ஐயமின்றிக் கூறலாம்'.

-

இவனுக்குப் பராந்தகன் தேவியம்மன், வானவன் மாதேவி என்னும் இரு மனைவியர் இருந்தனர். அவர்களுள் பராந்தகன் தேவியம்மன் ஒரு சேரமன்னன் புதல்வியாவாள்'. மற்றொரு மனைவியாகிய வானவன் மாதேவி என்பாள் திருக்கோவலூரி லிருந்த மலையமானாட்டுச் சிற்றரசன் மகள். இவனுக்கு ஆதித்த கரிகாலன், அருண்மொழிதேவன் என்ற இரு புதல்வரும் குந்தவை என்னும் ஒரு புதல்வியும் இருந்தனர். அவர்களுள் ஆதித்த கரிகாலன் இளைஞனாயிருந்தபோதே வீரபாண்டியனைப் போரில் கொன்றான் என்று ஆனைமங்கலச் செப்பேடுகள் கூறுகின்றன'.

சுந்தரசோழன் தன் மூத்த புதல்வனது வீரச் செயலையும் ஆற்றலையும் உணர்ந்து கி. பி. 966 - ல் அவனுக்கு இளவரசுப் பட்டங்கட்டினான். மற்றொரு மகனாகிய அருண்மொழி தேவன் என்பவனே பின்னர் எத்திசையும் புகழ்பரப்பி இனிது வாழ்ந்த முதல் இராசராசசோழன் ஆவன். குந்தவைப் பிராட்டி வல்லவரையன் வந்திய தேவனுக்கு மணஞ்செய்து கொடுக்கப் பெற்றனள்". அவ்வரசகுமாரன் வேங்கி நாட்டில் வாழ்ந்த கீழைச்

1. S.I. I., Vol. III, Nos. 152 to 198.

2. Ep. Ind., Vol. VI, P. 331.

3. S.I. I., Vol. V, No. 723.

'பொன்மாளிகைத் துஞ்சினதேவர் தேவியார் சேரமானார்

மகளார் பராந்தகன் தேவியம்மனார்.'

4. S.I. I., Vol. VII, No. 863.

5. Ep. Ind., Vol. XXII, No. 34, Verse 28

6. S.I. I., Vol. II, No. 6. ஸ்ரீ இராசராச தேவர் திருத்தமக்கையார் வல்லவரையர் வந்தியதேவர் மகாதேவியார் ஆழ்வார் பராந்தகன் குந்தவையார்.