உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

95

விண்ணகரம் என்னும் திருமால் கோட்டம் எடுப்பித்து அதற்கு வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துப் புரந்து வந்தவன் என்பதும் முன் விளக்கப்பெற்ற செய்திகள் ஆகும். இவன் தந்தை விக்கிரம சோழனும் திருமாலிடத்தும் அன்புபூண்டொழுகியவன் ஆவன். ஆகவே, இத்தகைய தந்தையிடத்தும் பாட்டனிடத்தும் பழகி வளர்ந்துவந்த நம் குலோத்துங்கன் திருமாலிடத்து வெறுப்புக் கொண்டு வைணவர்களுக்குத் தீங்கிழைத்தான் என்று கூறுவது எவ்வாற்றானும் பொருந்துவதன்று. இவன் உண்மையில் திருமால் சமயத்தில் வெறுப்புடையவனா யிருந்திருப்பின் இவன் தன் ஆட்சிக்குட்பட்ட சோழ இராச்சியத்தில் உள்ள எல்லாத் திருமால் கோயில்கட்கும் இடையூறு புரிந்திருத்தல் வேண்டுமன்றோ? ஆனால், தில்லையிலன்றி வேறு எவ்விடத்தும் இவன் அங்ஙனம் செய்ததாகத் தெரியவில்லை. எனவே இவன் தில்லைச் சிற்றம்பலவாணரிடத்து ஈடுபாடுடையவனாய் அப்பெருமான் எழுந்தருளியுள்ள கோயிலை மிகப் பெரிதாக அமைக்கக் கருதித் திருப்பணி தொடங்கியபோது, தில்லைக் கோவிந்தராசரை வழிபட்டுவந்த வைணவர்கள் அத் திருப்பணிக்கு முரண்பட்டு நின்றமையோடு தம்மாலியன்ற சில இடையூறு களைச் செய்தும் இருக்கலாம். அது பற்றிச் சினங்கொண்ட இவ் வேந்தன் அத் திருமால் மூர்த்தத்தைப் பெயர்த்துக் கடலில் போடச் செய்து பிறகு தான்மேற்கொண்ட திருப்பணியை நிறைவேற்றியிருத்தல் வேண்டும். இவன் தில்லைத் திருப்பணி நிகழ்த்தியபோது அதற்குத் திருமால் சமயத்தினர் செய்த இடையூறுகளை ஒரு பொருட்படுத்திக் கூறவிரும்பாத ஆசிரியர் ஒட்டக்கூத்தர், இவன் மன்றிற்கு இடங்காண வேண்டித் திருமாலை அவருக்குரிய பழைய கடலுக்கே அனுப்பிவிட்டான் என்று தம் தக்கயாகப் பரணியில் கூறியுள்ளனர். பிற்காலத்தெழுந்த திவ்யசூரி சரிதம், கோயிலொழுகு முதலான சில வைணவ நூல்கள் இவன் புரிந்த இச்செயலை மிகைப்படக் கூறி இவன்மீது அடாத பழிகளைச் சுமத்தியும் இவனைக் கிருமிகண்ட சோழன் என்று இழித்துரைத்தும் உள்ளன. அவை யெல்லாம் வெறும் கற்பனைக் கதைகளேயன்றி வேறல்ல என்பது நுணுகியாராய்

1.

தக்க யாகப் பரணி, தா. 777.

1