உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -4

வார்க்குப் புலப்படாமற் போகாது. இவன் செயல்பற்றிச் சோழ இராச்சியத்தில் அமைதியின்மையும் கலகமும் யாண்டும் ஏற்படவில்லை; பொதுமக்கள் எல்லோரும் அமைதியாகவே இனிது வாழ்ந்து வந்தனர்; எனவே, அவர்கள் இதனை நாட்டிற்குத் தீங்கு பயக்குங் கொடுஞ்செயலாகக் கருதவில்லை என்று தெரிகிறது. எனினும், பெருவேந்தனாகிய குலோத்துங்கன் இங்ஙனம் செய்தமைக்குத் தக்க காரணங்களிருப்பினும் இச் செயல் இவனது பெரும் புகழுக்குச் சிறிது இழுக்குண்டு பண்ணி விட்டது என்பதில் ஐயமில்லை.

இனி, திருமாலைக் கடலில் எறிந்த செயலை

வீரராசேந்திரன் புதல்வனாகிய அதிராசேந்திர சோழன்மேலேற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் சிலர் எழுதியிருப்பது எவ்வாறானும் பொருத்த முடையதன்று என்பது முன்னர் விளக்கப்பட்டுள்ளது.1 குலோத்துங்கன் காலத்திலிருந்த ஒட்டக்கூத்தர் தம் காலத்தில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சியைத் தாம் நேரிற் கண்டவாறு உலாக்களிலும் பரணியிலுங் குறித்திருக்கும்போது இதனை எளிதாக வேறோர் அரசன் மேல் ஏற்றிக்கூறுவது எங்ஙனம் பொருந்தும்? தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இச்செயல் நிகழ்த்தியவன் இராசராச சோழன் தந்தையாகிய குலோத்துங்க சோழன் என்று மிகத் தெளிவாகக் கூறியிருப்பதும் உணரற்பாலதாம்.2

க்

தில்லையம்பதியில் விக்கிரம சோழன் தன் ஆட்சியின் பத்தாம் ஆண்டில் நிகழ்த்தியனவாக அவன் மெய்க்கீர்த்தியில் காணப்படும் திருப்பணிகளும் அவன் புதல்வனாகிய குலோத்துங்கன் அங்கு நிகழ்த்தியனவாக உலாக்களிலும் தக்கயாகப் பரணியிலும் ஒட்டக்கூத்தரால் கூறப்படும் திருப்பணிகளும் வெவ்வேறு காலங்களில் நடைபெற்ற வெவ்வேறு திருப்பணி களேயாம். எனவே, அவையெல்லாம் விக்கிரம சோழன் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பெற்று நிறைவேற்றப்படாமல் அவன் புதல்வன் குலோத்துங்க சோழன் ஆட்சியில் முடிக்கப்பெற்றன என்று கருதுவதற்குச் சிறிதும் இடமில்லை என்க.

1. பிற்காலச் சோழர் சரித்திரம் - முதற் பகுதி, பக். 247-8.

2. தக்க யாகப் பரணியில் 777 ஆம் தாழிசையின் உரையில் இதனைக் காணலாம். 3. The Colas, Vol. II, p. 74.