உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

ஆட்சியின் சிறப்பு

97

இவ்வேந்தன் ஆளுகையில் சோழநாடு போரின்றி மிகச் சீரிய நிலையில் இருந்தது. அதனால் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் எத்தகைய இன்னல்களுமின்றி இனிது வாழ்ந்து கொண்டிருந்தனர். இவன் தந்தை விக்கிரம சோழனது ஆட்சியின் இறுதியில் சோழ இராச்சியம் எத்துணைப் பரப்புடையதாக இருந்ததோ அத்துணைப் பரப்புடையதாகவே இவன் ஆட்சியிலும் நிலைபெற்றிருந்தது எனலாம். ஆந்திர தேயத்தில் இவன் கல்வெட்டுக்கள் மிகுதியாகக் காணப்படுவதால் மேலைச் சளுக்கியரிடமிருந்து விக்கிரம சோழன் கைப்பற்றிய வேங்கி நாடு இவன் ஆளுகையின் கீழும் அமைதியாகவே இருந்து வந்தது என்பது ஒருதலை. எனவே, தன் ஆட்சிக்குட்பட்டிருந்த நாடெங்கும் அமைதி நிலவச் செங்கோல் செலுத்திய பெருவேந்தன் இவன் என்பது நன்கு துணியப்படும்.

குலோத்துங்கனது பல்கலைப் புலமை

இவன் தன் பாட்டனாகிய முதற் குலோத்துங்க சோழனைப் போல் பல்கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன் என்று தெரிகிறது. இவன் சிறப்பாகத் தமிழ்ப்புலமை மிக்கவன்; பல்வகைச் செய்யுட்களும் இயற்றும் ஆற்றல் வாய்ந்தவன்; இத்தகைய புலமையும் ஆற்றலும் தன் தந்தையின் அவைக்களப் புலவராக இருந்தவரும் கவிச் சக்கரவர்த்தியுமாகிய ஒட்டக்கூத்தர்பால் தமிழ் இலக்கண இலக்கியங்களை எல்லாம் நன்கு பயின்று இவன் பெற்றனவேயாம். இவன் தன் ஆசிரியராகிய ஒட்டக் கூத்தரிடத்தில் வைத்திருந்த அன்பும் மதிப்பும் அளவிட்டுரைக்குந் தரத்தன அல்ல. இவனைத் 'துரக வித்தியா விநோதன்' எனவும், ‘விநோதன்' எனவும் ‘நித்திய கீதப்பிரமோகன் எனவும், ‘ஞான கெம்பீரன்* எனவும் ஆசிரியர் ஒட்டக்கூத்தர் கூறியிருத்தலால் இவன் அசுவசாத்திரம், தனுர் சாத்திரம், இசை நூல் முதலான கலைகளிலும் வல்லவனா யிருந்தனன் என்பது நன்கு வெளியா கின்றது. வெளிநாட்டோடு போரின்மையும் உள்நாட்டில்

1.

குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், பா. 78.

2. மேற்படி, பா.6.

கூ