உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




112

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன்

வரராச ராசன்கை வாளென்ன வந்தே

என்னுந் தக்க யாகப் பரணிச் செய்யுளாலும் அதன் உரையாலும் சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள்காண வாரீர்’2

என்னும் இராசராச சோழனுலா அடிகளாலும் நன்கு வெளியாகின்றது. இவ்வரலாறு இராசராசன் கல்வெட்டுக்களில் யாண்டும் காணப்படவில்லை. ஆதலால், காவிரியாறு மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கத்தில் பகையரசனால் அடைக்கப் பெற்றபோது இவன் அவனைப் போரில் வென்று அதனைத் திறந்து கொணர்ந்தனனா அல்லது இயற்கை நிகழ்ச்சி யொன்றால் அடைப்புண்ட இடத்தை வெட்டுவித்து அவ்வாற்றிற்கு வழி கண்டனனா என்பது இப்போது புலப்படவில்லை. ஆனால், இராசராச சோழனுலாவிலுள்ள 'காவிரிக்குச் சோணாடு வாழ வழியிட்ட வாள்' என்னும் தொடரை நுணுகி யாராயுமிடத்து,

வன் பகை வேந்தனை வென்று, அவனால் அடைக்கப் பெற்றிருந்த காவிரியைத் திறந்துகொண்டு வந்திருத்தல் வேண்டுமென்பது குறிப்பாக உணரக் கிடக்கின்றது. இஃது எவ்வாறாயினும், இவன் ஆட்சிக்காலத்தில் ஓராண்டில் காவிரி நீர் சோழ மண்டலத்திற்கு வந்து சேராதவாறு நிகழ்ந்த தடையொன்றை இவன் தன் ஆற்றலால் நீக்கி முன்போல என்றும் அத்தண்ணீர் வந்துகொண்டிருக்குமாறு செய்திருத்தல் வேண்டும் என்பது ஒருதலை. எனவே, நாட்டு நலங் கருதி இவன் ஆற்றிய அருஞ்செயல் இஃது எனலாம்.

தலைநகர்

இவ் வேந்தன் ஆட்சியின் முற்பகுதியில் கங்கை கொண்ட சோழபுரமே தலைநகராயிருந்தது. பிறகு, இவன் பழையாறை

1. தக். பரணி, தா.549.

2. இரா. சோழனுலா, வரிகள் 169 170

'மலைச்சிறைதீர் வாட்கண்டன் வெள்ளணிநாள் வாழ்த்திக்

கொலைச்சிறை தீர் வேந்துக் குழாம்

என்னும் பழம்பாடற் பகுதியிலும் இவ்வரலாறு குறிக்கப் பட்டிருத்தல் காண்க. (தொல். புறத். சூத். 36- நச். மேற்.)