உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

125

இனி, இராசராசன் இறந்த நான்காம் ஆண்டில் எதிரிலிப் பெருமாளுக்கு இராசாதிராசன் என்னும் அபிடேகப் பெயருடன் முடி சூட்டிய அமைச்சன் திருச்சிற்றம்பலமுடையான் பெருமான்நம்பி என்பவன் கி. பி. 1171ஆம் ஆண்டில் இறந்து விட்டான் என்பது பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. இந்நிலையில் ஆந்திர நாட்டுக் கல்வெட்டுக் களை ஆதாரமாகக் கொண்டு இராசராசன் கி. பி. 1173-ஆம் ஆண்டில் உயிருடன் இருந்தனன் என்று கொள்வது சிறிதும் பொருந்தாது. அன்றியும், அவ்வாண்டில் இவன் உயிருடன் இருந்திருப்பின் பாண்டி நாட்டில் குலசேகர பாண்டியன் பொருட்டுச் சோழ நாட்டுப் படைத் தலைவர்கள் நிகழ்த்திய போர்கள், இவன் ஆட்சியில் நிகழ்ந்திருத்தல் வேண்டும். ஆனால் அப்போர்கள் எல்லாம் இராசாதிராசன் ஆட்சியில் நடைபெற்றன என்பது கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. ஆகவே, இராசராசன் அப்போர் நிகழ்ந்த காலத்தில் இல்லை என்பது தேற்றம். எனவே, இராசராசன் கி. பி. 1163ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இறந்திருத்தல் வேண்டுமென்பது நன்கு துணியப் படும்.

H