உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

வன் காலத்து குறுநில மன்னர்களும் தலைவர்களும்

இவன் ஆட்சிக் காலத்தில் அரசியல் அதிகாரிகளாக இருந்தோர் பலர் ஆவர். சோழ இராச்சியத்தில் யாண்டும் அமைதி நிலவியிருந்தமைக்குக் காரணம் அன்னோரின் பேராற்றலும் பேருதவியுமே எனலாம். இவ்வேந்தனுக்குட் பட்டிருந்த குறுநில மன்னர்கள் தம் சக்கரவர்த்தியின்பால் பேரன்புடையவர்களாய் உற்றுழி யுதவி வந்தமையும் அத்தகைய நிலைக்கு ஓர் ஏதுவாயிருந்தது என்பது உணரற்பாலது. எனினும், இவன் ஆட்சிக் காலத்தில் சிற்றரசர்களும் அரசியல் தலைவர் களும் தாம் வாழ்ந்து கொண்டிருந்த இடங்களில் தம் அதிகாரங் களை நிலைபெறச் செய்து மிக சுயேச்சை யுடையவர்களாய் இருந்து வந்தமை குறிப்பிடத் தக்கதாகும். நம் இராசாதிராசன் இரண்டாம் இராசராசனுடைய மகனல்லன் என்பதும் புதிதாக ஆட்சி யுரிமை அளிக்கப் பெற்றவன் என்பதும் முன்னர் விளக்கப் பட்டுள்ளன. எனவே, குறுநில மன்னர்களின் ஆதரவும் அரசியல் அதிகாரிகளின் அன்புடைமையும் இவனுக்கு இன்றியமை யாதனவா யிருந்தன. அது பற்றி இவ்வேந்தன் அன்னோர்பால் பற்றுடையவனாய் விரிந்த மனப் பான்மையுடன் ஒழுகி வந்தனன். அவர்கள் அதனையே தங்கட்குத் தக்க வாய்ப்பாகக் கருதித் தம் அதிகாரங்கள் ஆங்காங்கு நிலை பெற்றிருக்கும்படி செய்து கொண்டனர். இத்தகைய நிலை நாளும் வளர்ச்சி யெய்திப் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் சோழர் களின் வீழ்ச்சிக்கும் சோழ இராச்சியத்தின் அழிவிற்கும் காரண மாயிற்று என்பது ஒருதலை. இனி, நம் இராசாதிராசன் காலத்து அரசியல் தலைவர்களுள், கல்வெட்டுக்களால் அறியப்படும் சிலர் வரலாற்றை ஈண்டு ஆராய்வோம்.

1. திருச்சிற்றம்பலமுடையானான பெருமானம்பிப் பல்லவராயன்: இவன் இரண்டாம் இராசராச சோழன் ஆட்சியின் பிற் பகுதியில் முதல் அமைச்சனாக இருந்தவன்; அவன் இறந்த போது அவனுடைய இளங் குழந்தைகளையும் அந்தப்புர மகளிரையும் இராசராசபுரத்திற்கு அழைத்துவந்து பாதுகாத்தவன்; அவன் விரும்பியவாறு சோழ நாட்டில் இராசாதிராச சோழனுக்கு முடி சூட்டி இவ் வேந்தனது ஆட்சி நன்கு நடைபெறுமாறு