உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




172

1

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4 எழுதியுள்ளனர். அன்னோர் கூறுவது எவ்வாற்றானும் பொருந்துவ தன்று. அறிவு திரு ஆற்றல்களில் சிறந்து பகைவர் எல்லோரும் நடுங்குமாறு பேராண்மை படைத்துப் பெருவீரனாக நிலவிய நம் குலோத்துங்கனை மாறவர்மன் சுந்தர பாண்டியன் போரில் வென்றிருப்பானேல் இவனைத் தான் வென்ற செய்தியைத் தன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் தன் கல்வெட்டுக்கள் எல்லாவற்றிலும் தவறாமல் குறித்திருப்பான் என்பது ஒருதலை. அவன் அங்ஙனம் குறிக்காமையால் அச் செய்தி ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. அன்றியும் மாறவர்மன் சுந்தர பாண்டியன் நம் குலோத்துங்கனுக்குப் பொன்னமராவதியில் சோணாடு வழங்கியதாகச் சொல்லப்படும் செய்தி அவனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டு முதல் 14 ஆம் ஆண்டு முடிய கல்வெட்டுகளில் குறிக்கப்படவில்லை. அவனது 15-ம் ஆட்சியாண்டாகிய கி. பி. 1231 -ல் வரையப்பெற்ற கல்வெட்டொன்றில் மாத்திரம் அச்செய்தி காணப்படுகின்றது.* எனவே, அதனை உண்மைச் செய்தி எனக் கோடற்குச் சிறிதும் இடமில்லை. அன்றியும், மாறவர்மன் சுந்தர பாண்டியன் இரண்டாம் முறை நிகழ்த்திய சோணாட்டுப் போரில் தோல்வி யுற்ற சோழ மன்னனே முதற் போரில் தோல்வி எய்தி அப் பாண்டியன்பால் அடைக்கலம் புகுந்து தன் நாட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டவன் என்பது அச் சுந்தர பாண்டியன் மெய்க்கீர்த்தியால்' நன்கறியக் கிடக்கின்றது. ஆகவே, சுந்தர பாண்டியனது இரண்டாம் படையெழுச்சியில் தோல்வியுற்ற மூன்றாம் இராசராசனே அவனது முதற்படையெழுச்சியில்

அவன்பால் அடைக்கலம்புகுந்து அவன் வழங்கிய

நாட்டைப்பெற்று அரசாண்டவன் என்பது தெள்ளிதிற் புலனாதல் காண்க. எனவே சுந்தரபாண்டியன் படை யெழுச்சியின்போது நம் குலோத்துங்கன் உயிருடனிருந்து அவன்பால் தோல்வி எய்தினான் என்று கூறுவது சிறிதும் பொருந்தாததொன்றாம். குலோத்துங்கனது இறுதிக் காலம்

1. The Colas, Vol. II, pp. 148 and 149; ARE for 1926 part II, para 32; A Manual of the Pudukkottai State, Vol. II, part I, p. 613.

2. Ins. 9 of 1926.

3. S.I.I., Vol. V, No. 431.