உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

173

வரையில் சுந்தர பாண்டியன் கல்வெட்டுக்கள் சோழ நாட்டில் காணப்படாமையொன்றே இவன் ஆட்சிக் காலத்தில் அவன் படை யெடுத்து வரவில்லை என்பதை நன்கு வலியுறுத்தவ தாகும். ஆகவே சிலர் கருதுவது போல் நம் குலோத்துங்கன் தன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் சுந்தர பாண்டியன் பால் தோல்வியுற்றுப் பேரின்னலுக்கு உள்ளாக வில்லை என்பதும் தன் வாணாள் முழுமையும் பெரு வீரனாக நிலவிப் பகைவேந்தர்கள் அடிபணிந்து திரை செலுத்தப் புகழுடன் வாழ்ந்துவந்தனன் என்பதும் அறியற்பாலனவாம்.

இனி, நம் குலோத்துங்கனது ஆட்சிக் காலத்தில் நிலவிய குறுநில மன்னர்களும் அரசியல் தலைவர்களும் யாவர் என்பதைக் கல்வெட்டுக்களின் துணைகொண்டு ஆராய்ந்து

காண்பாம்.

1. கிளியூர் மலையமான் இறையூரன் இராசராச சேதிராயன்:

இவன் மலையமான் மரபில் தோன்றிய ஒரு குறுநில மன்னன்; கிளியூரைத் தலைநகராகக் கொண்டு சேதி நாடு எனப்படும் மலையமானாட்டை அரசாண்டவன். இவன் குலோத்துங்கனுக்குப் படைத் தலைவனா யிருந்தமையோடு இவ் வேந்தன் பால் பேரன்புடையவனாகவும் ஒழுகி வந்தனன் என்பது கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. கி. பி. 1200 ல் திரு அறையணி நல்லூர்க் கோயிலில் மூன்று நந்தா விளக்குகள் எரிக்கும் பொருட்டு இறையிலி நிலம் வழங்கியுள்ள பெரியுடையான் இராசராச கோவலராயன் என்பான் இச்சேதிராயனுடைய புதல்வன் ஆவான்; எனவே, இம் மலையமான் மரபினர் அந்நாட்களில் சேதிராயன், கோவலராயன் என்ற இரு பட்டங்களை யுடைய வராயிருந்தமை அறியற்பாலது.

2. மலையன் நரசிம்மவர்மன் ஆகிய கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்:2

இவன் மலையமான் மரபில் தோன்றிய ஒரு குறுநில மன்னன்; ஆடையூரைத் தலைநகராகக் கொண்டு சேதி நாட்டில்

1. S.I.I.,Vol. VII, No. 1021.

2. Ibid, Vol. VIII, No. 128.

9