உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிற்காலச் சோழர் சரித்திரம் - 2

191

அங்கு விசயாபிடேகமும் வீராபிடேகமும் செய்து கொண்டா னென்று உணர்த்துகின்றதே யன்றித் தோல்வி யெய்திய இராசராசன் அதன் பின்னர் எங்குச் சென்றனன் என்பதைக் கூறிற்றில்லை. ஆயினும் கத்திய கர்ணாமிர்தம் என்ற கன்னட நூலொன்றும்' வடஆர்க்காடு ஜில்லா திருவயிந்தி புரத்திலுள்ள மற்றொரு கல்வெட்டும்' இராசராசன் நாடிழந்த பிறகு நிகழ்ந்த செய்திகளை நன்கு விளக்குகின்றன. அவை கிடைத்திலவேல் அக்காலப்பகுதியில் நிகழ்ந்த வரலாற்றுண்மைகளைச் சிறிதும் அறிய இயலாதென்பது ஒருதலை. அவற்றுள் கத்திய கர்ணாமிர்தம் என்னும் நூல், சுந்தர பாண்டியன்பால் தோல்வியுற்று நாடிழந்த ராசராசன் தன் நண்பனாகிய குந்தளநாட்டரசனிடம் உதவி பெறும் பொருட்டு வடதிசை நோக்கிச் சென்றான் என்றும், அப்போது காடவர் குல மன்னன் ஒருவன் இவனை இடையில் போரில் வென்று பரிவாரத்துடன் சிறை பிடித்துத் தன் தலை நகராகிய சேந்த மங்கலத்தில் சிறையிட்டனன் என்றும், அத்துயர நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற போசள மன்னன் வீரநரசிம்மன் என்பான் பெரும் படையுடன் புறப்பட்டு வந்து காவேரி யாற்றின் வடகரையில் திருவரங்கத்திற்கு அண்மையில் தங்கித் தன் தண்ட நாயகனைக் கொண்டு பகைஞரை வென்று இராச ராசனைச் சிறை மீட்பித்தான் என்றும் கூறுகின்றது. அந்நூலில் சொல்லப்பட்டுள்ள காடவர் குல மன்னன் கோப்பெருஞ் சிங்கனே யாவான் என்பது திருவயிந்திரபுரக் கல்வெட்டால் நன்கு வெளியாகின்றது. அப்பல்லவர் தலைவன் இராசராசனை எவ்விடத்தில் போரில் வென்று சிறைப்பிடித்தனன் என்பதை அந்நூல் அறிவித்திலது. எனினும், கோப்பெருஞ் சிங்கனது வயலூர்க் கல்வெட்டு, அவன் இராசராசனை வட ஆர்க்காடு

1. The Colas, Vol. II, p. 180.

2. Ep. Ind., Vol. XXIII, No. 27.

3. இக் கல்வெட்டு முதலில் உரைநடைப் பகுதியையும் அதனையடுத்து ஐந்து பாடல்களையும் கொண்டது. இதில் காணப்படும் உரைநடைப்பகுதி சகல புவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ கோப்பெருஞ்சிங்கன் சோழனைத் தெள்ளாற்றில் வென்று சகல பரிச்சின்னமுங் கொண்டு சோழனைச் சிறையிட்டு வைத்து சோணாடு கொண்ட அழகிய சீயன்' என்பதாம். இதில் தெள்ளாற்றில் போர் நிகழ்ந்தமை கூறப்பட்டிருத்தல் காண்க, கோப்பெருஞ்சிங்கன் சோழ மன்னனை இத் தெள்ளாற்றில் பொருது வென்ற காரணம் பற்றி இவ்வூரைச் சூழ்ந்த நிலப்பரப்பு முற்காலத்தில் 'சிம்மம் பொருத வளநாடு' என்று வழங்கப்பெற்றது என்பது கல்வெட்டால் அறியக்கிடக்கின்றது. (Ins. 382 of 1925)