உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




194

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 4

பதினாறாம் ஆட்சி யாண்டில் பொறிக்கப் பட்டிருத்தலால் இவ்வேந்தன் அவ்வாண்டில்தான் தனக்குரிய சோழ நாட்டை மீண்டும் பெற்று ஆட்சிபுரியத் தொடங்கியிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, கி. பி. 1232ஆம் ஆண்டில் நம் இராசராசன் சோழ இராச்சியத்தை முன்போல ஆட்சிபுரியும் நிலையை எய்தினன் எனலாம். இதுகாறும் விளக்கியவாற்றால் மாறவர்மன் சுந்தர பாண்டியனது இரண்டாம் படையெழுச்சி யினால் நாடிழந்த இராசராசன் தன் நண்பனது உதவி பெறும் பொருட்டு வடபுலஞ் சென்று கொண்டிருந்தபோது பல்லவர் குலச் சிற்றரசனாகிய கோப்பெருஞ்சிங்கனால் தெள்ளாற்றுப் போரில் சிறைபிடிக்கப் பெற்றுச் சேந்த மங்கலத்தில் வைக்கப் பட்டிருந்தனன் என்பதும், பிறகு அதனை யறிந்த போசள மன்னன் வீரநரசிம்மன் என்பவன் கி. பி. 1232-ல் படையெடுத்து வந்து கோப்பெருஞ்சிங்கனை வென்று இராசராசனைச் சிறை மீட்டு, இவனுக்குரிய சோழ இராச்சியத்தைப் பெற்று இவன் அரசாண்டு வருமாறு செய்தனன் என்பதும் நன்கு புலனாதல் காண்க. அவ்வாண்டிற்குப் பின்னர் எத்தகைய இடையூறு மின்றித் தன் வாழ்நாள் முழுதும் இராசராசன் ஆட்சி புரிந்து வந்தமை அறியற்பாலதாகும்.

இனி, வீரநரசிம்மன் படைத் தலைவர்கள் நம் இராச ராசனைச் சிறைமீட்கும் பொருட்டுக் கோப்பெருஞ்சிங்கனோடு போர்புரிந்து கொண்டிருந்த நாட்களில், அப் போசள வேந்தன் நேரில் மாறவர்மன் சுந்தர பாண்டியனோடு போர் புரிந்து அவன் ஆட்சிக் குட்பட்டிருந்த சோணாட்டின் தென் பகுதியைத் தான் கைப்பற்றி அதனை இராசராசனுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்க தொன்றாம். காவேரி யாற்றங்கரையிலுள்ள மகேந்திரமங்கலத்தில் வீரநரசிம்மனுக்கும் சுந்தர பாண்டிய னுக்கும் பெரும்போர் நிகழ்ந்ததென்றும், வெற்றியெய்திய போசள மன்னனுக்குப் பாண்டியன் பணிந்து கப்பஞ் செலுத்தினான் என்றும், கத்திய கர்ணாமிர்தன் என்னும் நூல் கூறுகின்றது.' அன்றியும், வீரநரசிம்மன் கல்வெட்டுக்கள்,2 அவன் பாண்டிய

1. The Colas, Vol II, pp. 184 and 185.

2. Ep. Car., Vol. V, Ak. 123; Quarterly Journal of Mythic Society, Vol. II, p. 128.