உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




202

23. மூன்றாம் இராசேந்திர சோழன் (கி. பி. 1246 – 1279)

இவன் மூன்றாம் இராசராச சோழனுடைய புதல்வன் என்பதும் கி.பி. 1246 ஆம் ஆண்டில் இளவரசுப் பட்டம் கட்டப்பெற்று அக்காலமுதல் தானே ஆட்சியை ஏற்று நடத்தி வந்தனன் என்பதும் முன்னர் விளக்கப்பட்டுள்ளன. இவனை இராசராச சோழனுடைய தம்பி என்று சிலர் கூறுவர். அங்ஙனம் கொள்வதற்கு ஒரு சிறிதும் ஆதாரமின்மை அறியற்பாலது. அன்றியும், இராசராசனுக்கும் இராசேந்திரனுக்கும் ஆட்சியுரிமை பற்றிச் சோணாட்டில் போர் நிகழ்ந்ததென்றும் இவ்விருவரும் சோழ நாட்டை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு தனித்தனியாக அரசாண்டு வந்தனரென்றும் இறுதியில் இராசேந்திரன் இராச ராசனைக் கொன்றுவிட்டு நாடு முழுவதையும் கைப்பற்றித் தன்னாட்சிக் குட்படுத்திக் கொண்டானென்றும் ஆராய்ச்சியாளர் சிலர் எழுதியுள்ளனர்.2 அன்னோர் முடிவுகளுக்குரிய சான்றுகள் யாண்டும் காணப்படாமையால் அவையனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்க செய்திகள் ஆக மாட்டா என்பது ஒருதலை.

இவன், இராசகேசரி பரகேசரி என்ற இரு பட்டங்களுள் பரகேசரி என்னும் பட்டம் புனைந்து அரசாண்டவன் என்பது இவன் கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றது.

1. காகதிய கணபதியின் நாயனப்பல்லிக் கல்வெட்டில் திராவிடமண்டலத்துக் குலோத்துங்க ராஜேந்திரனை அவன் வென்று கப்பம் வாங்கினான் என்று சொல்லப்பட்டிருத்தலால் மூன்றாம் இராசேந்திரன் மூன்றாங் குலோத்துங்கன் மகனாதல் வேண்டும் என்பர். (Ep. Ind., Vol. XXVII, No. 35) இக்கல்வெட்டுச் செய்தி உறுதியாகக்கொள்ளத் தக்கதன்று. இதில் சில ஐயங்களும் தடைகளும் ஏற்படுகின்றன. அன்றியும் இதில் குறிக்கப்பெற்றவன் வெலநாண்டுச் சோழன் என்பது சிலர் கருத்து. (The Telugu Journal Bharati 1945)

South India and her Mahammadan Invaders, p. 35.

2. Ibid, pages 37 and 40.

Annual Report on Epigraphy for 1900, paragraphs 30 and 48. Ibid, for 1912, part II, para 32.