உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 4.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




213

24. முடிவுரை

இதுகாறும் எழுதியுள்ள பல அதிகாரங்களால் கி. பி. ஓன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து பதின் மூன்றாம் நூற்றாண்டின் கடைப்பகுதி வரையில் சற்றேறக் குறைய நானூற்று முப்பது ஆண்டுகட்குமேல் சோழ இராச்சியத்தில் சக்கரவர்த்தி களாக வீற்றிருந்து அரசாண்ட சோழ மன்னர்களின் வரலாற்றையும் அக்காலப் பகுதியில் நம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள பல அரிய சரித நிகழ்ச்சிகளையும் நன்குணரலாம். அப் பெருவேந்தருள் இறுதியிலிருந்தவன் மூன்றாம் இராசேந்திரன் சோழன் என்பதும் அவனுக்குப் புதல்வன் இன்மையால் அவன் ஆட்சிக்குப் பிறகு சோழ நாடு பாண்டியர் ஆட்சிக்குள்ளாகிவிட்டது என்பதும் முன்னர் விளக்கப்பெற்றுள்ளன. ஆராய்ச்சியாளருள் சிலர், இராசேந்திர சோழனுக்குச் சேமப் பிள்ளை' என்ற ஒரு புதல்வன் இருந்தனன் என்று எழுதியுள்ளனர். சோழ மன்னர்கள் தமக்குக் கீழ்ப் பட்ட குறுகிய மன்னரை ‘நம் மகன்” எனக் கூறும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது என்பது அன்னோர் கல்வெட்டுக்களால் அறியக் கிடக்கின்றது. அம்முறையில் கூறப்பெற்றுள்ள அத்தலைவனை இராசேந்திர சோழனுடைய புதல்வன் என்று கருதுவது எவ்வாற்றானும் ஏற்புடைத்தன்று.

இனி, மைசூர் நாட்டிலுள்ள பங்களூர் ஜில்லாவில் வீரசைவ வீரப் பிரதாப சோழ மகாராசன் என்பவன் ஒருவன் கி.பி. 1301-ல் அரசாண்டுகொண்டிருந்தான் என்பது அங்குள்ள கல்வெட்டொன்றால்'அறியப்படுகின்றது. காஞ்சி அருளாளப் பெருமாளுக்கு வீரசோழன் மகன் வீரசம்பன் என்பான் கி.பி. 1314-ல் ஒரு தேர் அளித்தனன் என்று அப்பெருமாள் கோயிலிலுள்ள

1. Ins. 515 of 1922; MER. 1923 part II, para 45.

2. Ins. 604 of 1920; Annual Report on South Indian Epigraphy for 1921, part II, para 34.

3. Ep. Car., Vol. IX, Bn. 96.